புருணை ஆயுதப் படைத் தலைவரான மேஜர் ஜெனரல் பலவான் ஹாஜி முஹம்மது ஹசாய்மி பொல் ஹசானுக்கு ராணுவத்துக்கான மெச்சத்தக்க சேவை பதக்கத்தை அதிபர் ஹலிமா யாக்கோப் வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
புருணை ஆயுதப் படைத் தலைவராக 2020ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை அவர் பங்களித்தது, சிங்கப்பூர் ராணுவத்திற்கும் புருணை ஆயுதப் படைக்கும் இடையே உள்ள வலுவான உறவுக்குப் பங்காற்றியது ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருது அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொம்பாக் டிரைவில் அமைந்துள்ள தற்காப்பு அமைச்சின் கட்டடத்தில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னிடமிருந்து விருதை மேஜர் ஜெனரல் ஹசாய்மி நேற்று பிற்பகல் பெற்றுக்கொண்டார்.
மேஜர் ஜெனரல் ஹசாய்மி தலைமையில் புருணை ஆயுதப்படையும் சிங்கப்பூர் ராணுவமும் நிபுணத்துவப் பரிமாற்றத் திட்டங்களின் மூலம் தங்களின் இருதரப்பு உறவை வலுவாக்கிக்கொண்டுள்ளதாக தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.
இரு நாடுகளின் நீண்டகால நட்பும் அவற்றுக்கிடையே நிலவும் ஒத்துழைப்பும் தொடர்ந்து வலுவானதாக இருக்கும் என்று தாம் நம்புவதாக மேஜர் ஜெனரல் ஹசாய்மி தெரிவித்ததுடன் தமக்கு உயரிய விருது வழங்கப்பட்டதில் பெருமிதம் கொள்வதாகவும் கூறினார்.

