திருமண ஜோடிகளைச் சேர்த்துவைக்கும் இணையப்பக்கத்தில் தம்மை ஓர் இளம் பெண்ணாகக் காட்டிக்கொண்டு ஆடவர் ஒருவரை நம்பவைத்து பணம் பறித்த 51 வயது மாதுக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு முன்பு திருமண ஆசை காட்டி பல ஆண்களை 51 வயது மல்லிகா ராமு ஏமாற்றி தண்டனை அனுபவித்துள்ளார்.
இம்முறை தமது உறவினரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி தம்மை 25 வயது பெண்ணாக மல்லிகா காட்டிக்கொண்டார்.
திருமண ஜோடி இணையப்பக்கத்தில் அந்தப் படத்தைப் பார்த்து மல்லிகா விரித்த வலையில் 29 வயது இந்திய நாட்டவர் வசமாக மாட்டிக்கொண்டார்.
அவரைத் திருமணம் செய்துகொள்வதாகப் பொய் கூறி அந்த ஆடவரிடமிருந்தும் அவரது தந்தையிடமிருந்தும் மல்லிகா $5,750 பறித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வசிக்கும்
மல்லிகா இக்குற்றத்தைப் புரிந்தபோது சொந்தத் தொழில் செய்து கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தாம் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும் சிங்கப்பூர்
திரும்பியதும் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் மல்லிகா அந்த ஆடவரிடம் தெரிவித்தார்.
பணம் தேவைப்படுவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்ட மல்லிகா பிறகு சிங்கப்பூரில் உள்ள தானியங்கி வங்கி இயந்திரம் மூலம் $2,000 திருப்பி அனுப்பியபோது அந்த ஆடவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் பல இடங்களில் விசாரித்த பிறகு உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

