செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
dde67487-4781-43ce-bcf0-d5659c5e7946
-

காசநோய் சிகிச்சைக்கு அனுப்ப தவறிய மருத்துவர் இடைநீக்கம்

காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியை அதற்கான சிகிச்சைக்குப் பரிந்துரைக்கத் தவறிய மருத்துவர் 15 மாதங்களுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மியன்மாரைச் சேர்ந்த அந்தப் பணிப்பெண் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் சான்றிதழ் அளித்தார். ஆனால் உண்மையில் அப்பெண் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

எக்ஸ்ரே பரிசோதனையில் அப்பெண்ணின் நுரையீரலில் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தும் அப்பெண்ணை பிராவிடன்ஸ் மருந்தகத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவரான டாக்டர் டியோ சீ யாங் சிகிச்சைக்கு அனுப்பவில்லை. இதன்மூலம் அவர் சட்டத்துக்கு உட்பட்டு நடந்துகொள்ளவில்லை.

அந்தப் பணிப்பெண்ணுக்குக் காசநோய் இருப்பதை வேறொரு மருத்துவர் பிறகு உறுதி செய்தார்.

அப்பணிப்பெண்ணின் முதலாளியுடைய சகோதரருக்குக் காசநோய் ஏற்பட்டது. அப்பெண்ணிடமிருந்து அவருக்கு அந்நோய் பரவியிருக்கக்கூடும் என்று சிங்கப்பூர் மருத்துவ மன்றம் கூறியது. அந்த ஆடவர் ஒரே வீட்டில் வசித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பணம் பறித்த முன்னாள் ஆய்வாளர்

முன்னாள் ஆய்வாளர் ஒருவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திடம் (என்யுஎஸ்) போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து $39,500 பெற்றுக்கொண்டதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் குற்றத்தை 42 வயது தாமஸ் டே கொக் ஹியோங் 2010ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மோசடிக் குற்றத்தில் ஈடுபட்டதை என்யுஎஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவப் பொறியியல் துறையில் ஆய்வாளராக இருந்த டே ஒப்புக்கொண்டார்.

அவருக்கு அடுத்த மாதம் 25ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும்.

பிரேசில் கடற்படைக்குக் கப்பல் கட்டித்தரும் செம்ப்கார்ப் மரின்

பிரேசில் கடற்படைக்குக் கப்பல் கட்டித்தரும் ஒப்பந்தத்தை செம்ப்கார்ப் மரின் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு $209 மில்லியன்.

செம்கார்ப் மரின் கட்டித்தரும் கப்பலை பிரேசில் கடற்படை வடதுருவத் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் அறிவியல் ஆய்வுக்காகப் பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

93.9 மீட்டர் நீளம், 18.5 மீட்டர் அகலம் கொண்ட கப்பல் கிட்டத்தட்ட 5,800 டன் எடை கொண்டிருக்கும். வடதுருவத்தில் பனிக்கட்டிகள் நிறைந்த கடற்பகுதியில் செல்ல ஏதுவாக கப்பல் கட்டப்படும்.

கப்பலுக்கான கட்டுமானப் பணிகள் இவ்வாண்டு தொடங்கி 2025ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'எக்சிமா' தோல் நோயால் பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு

கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது சிங்கப்பூரில் எக்சிமா எனப்படும் தோல் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்ததாக தேசிய தோல் சிகிச்சை நிலையமும் தனியார் தோல் மருத்துவ நிபுணர்களும் தெரிவித்தனர்.

கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என்று ஊக்குவிக்கப்பட்டது. அடிக்கடி கைகளைக் கழுவியதால் எக்சிமா பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து பலமுறை சவர்க்காரம் பயன்படுத்தி கைகளைக் கழுவியதாலும் கைச் சுத்திகரிப்பான் திரவத்தைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தப்படுத்தியதாலும் பலருக்குக் கைகளில் எக்சிமா பாதிப்பு ஏற்பட்டதாக டிஎஸ் தோல் சிகிச்சை மருந்தகத்தைச் சேர்ந்த தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் கோவி லியூ தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது, கொவிட்-19 நெருக்கடிநிலையின் போது வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டதால் சிலர் செல்லப் பிராணிகளை வாங்கியதாலும் ஒவ்வாமை காரணமாக இவ்வகை தோல் நோய் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. சிங்கப்பூரில் 21 விழுக்காடு சிறுவர்களுக்கும் 11 விழுக்காடு பெரியவர்களுக்கும் எக்சிமா பாதிப்பு இருப்பது 2015ஆம் ஆண்டில் 681 பேரிடம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) நடத்திய ஆய்வில் தெரியவந்தது.