மூத்த அரசாங்க வழக்கறிஞரான ஜி. கண்ணன் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 52. தனது குடும்பத்துடன் தாய்லாந்தின் புக்கெட் தீவில் விடுமுறையைக் கழித்துகொண்டிருந்தபோது திரு கண்ணனின் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
துணை அரசாங்க வழக்கறிஞரான திரு கண்ணன், மூத்த அரசு வழக்கறிஞராகவும், அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்தின் குற்றவியல் வழக்கு பிரிவின் மூத்த இயக்குநராகவும் பொறுப்புவகித்தார்.
2018ல், தேசிய தின விருதுகளில் வழங்கப்பட்ட நீண்டகாலச் சேவை விருது இவருக்கு வழங்கப்பட்டது.
திரு கண்ணன் பல முக்கிய வழக்குகளில் வாதாடியுள்ளார். குறிப்பாக, கூட்டுரிமை வீட்டிலிருந்து போத்தல் தூக்கியெறியப்பட்டு முதியவர் கொல்லப்பட்ட சம்பவம், 'தி ரியல் சிங்கப்பூர்' இணையத்தளத்தின் ஆசிரியர்களுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் அவர் அரசாங்க தரப்பு வழக்கறிஞராக பணியாற்றினார்.
திரு கண்ணனின் மறைவு சிங்கப்பூரின் சட்ட துறைக்குப் பெரிய இழப்பு என்று பல வழக்கறிஞர்கள் கூறினர். பலரும் அவரை உயர்வாக கருதியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
திரு கண்ணனுக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

