தன்னுடைய உறவுக்காரப் பெண்ணின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, வரன்தேடும் இணையத்தளத்தில் ஓர் இந்திய ஆடவரை $4,000க்கு மேல் ஏமாற்றியுள்ளார் ஒரு சிங்கப்பூர் பெண்.
ஏமாற்று குற்றத்தை ஒப்புக்கொண்ட 51 வயதான மல்லிகா ராமுக்கு ஏழு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
20 வயது மதிக்கத்தக்க தன்னுடைய உறவினரின் புகைப்படத்தை 'தமிழ் மேட்ரிமோனி' எனும் இணையத்தளத்தில் மல்லிகா பதவிவேற்றம் செய்துள்ளார். 'கீர்த்தனா' என்ற புனைப்பெயரைத் தமக்கு கொடுத்துக்கொண்டார். தான் திருமணமாகாத பெண் என்று அவர் தன்னை வர்ணித்துள்ளார்.
இந்நிலையில் அந்த இணையத்தளத்தின் வழி அவருக்கு இந்தியாவைச் சேர்ந்த 29 வயது ஆடவருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் தொலைபேசியில் உரையாடத் தொடங்கினர். பலமுறை காணொளி வழியாக 'கீர்த்தனாவுடன்' பேச அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஏதோ ஒரு சாக்குப்போக்கு சொல்லி மல்லிகா தட்டிக்கழித்துள்ளார்.
ஆடவரின் நம்பிக்கையைப் பெற மல்லிகா அவருக்கு சிலமுறை பரிசுகளும் அனுப்பியுள்ளார்.
சமயம் பார்த்து தனக்கு பண உதவி தேவை என்று மல்லிகா அந்த ஆடவரிடம் கூறியிருக்கிறார். நபரும் 4,000 வெள்ளிக்கு மேல் மல்லிகாவுக்கு அனுப்பியுள்ளார்.
பேஸ்புக்கில் உண்மையான கீர்த்தனாவின் புகைப்படத்தைப் பார்த்தபோதுதான் மல்லிகாவின் ஏமாற்று வேலை ஆடவருக்குத் தெரியவந்தது. கீர்த்தனாவைத் தொடர்புகொண்டு உண்மையை அறிந்துகொண்டார்.
ஏற்கனவே பல ஆண்களை $225,000 மேல் ஏமாற்றிய மல்லிகா, 2007ல் அந்தக் குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

