டெங்கிக் காய்ச்சலைத் தடுப்பதில் சிங்கப்பூரின் அணுகுமுறை
கொசுக்களை கொசுக்களால் ஒழிக்கும் முயற்சியில் தனிச்சிறப்பு வாய்ந்த அணுகுமுறையை சிங்கப்பூர் பின்பற்றுகிறது. அதாவது வோல்பாகியா எனும் நுண்ணுயிரால் பாதிக்கப்பட்ட ஆண் ஏடிஸ் கொசுக்களை மட்டுமே உற்பத்தி செய்து குறிப்பிட்ட இடங்களில் சிங்கப்பூர் விடுவிக்கிறது.
வோல்பாகியாவால் பாதிக்கப் படாத பெண் கொசுக்கள், வோல்பாகியாவால் பாதிக்கப்பட்ட ஆண் கொசுக்களுடன் சேர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும்போது முட்டை உற்பத்தியானாலும் அவை பொரிக்காது. இதனால் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை குறைகிறது.
இத்தகைய ஒடுக்குமுறையை அமெரிக்கா, சீனா, தாய்லாந்து உட்பட ஐந்து நாடுகள் பின்பற்றுகின்றன.
இதற்கு மாறாக, பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் மாற்று உத்தியைப் பயன்படுத்துகின்றன. இதில் வோல்பாகியா தொற்றிய ஆண் மற்றும் பெண் கொசுக்கள் பரவலாக விடுவிக்கப்படுவதால் அனைத்துமே வோல்பாகிய தாங்கிய கொசுக்களாக மாறுகின்றன.
டெங்கி, ஸிக்கா, சிக்குன் குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற கிருமிகளின் இனப்பெருக்கத்தை வோல்பாகியா தடுக்கிறது.
நோய் ஏற்படுத்தும் மோசமான கொசுக்களை மாற்றி வோல்பாகியா தாங்கிய கொசுக்களை இனப்பெருக்கம் செய்வதே மாற்று உத்தியின் நோக்கமாகும். இதன் மூலம் டெங்கி போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப் படுகின்றன.
இந்த மாற்று உத்தியை மலேசியா, இந்தோனீசியா, ஆஸ்திரேலியா, வியட்னாம், இலங்கை போன்ற நாடுகள் பயன்படுத்துகின்றன.
தேசிய சுற்றுப்புற அமைப்பின் சுற்றுப்புற சுகாதாரக் கழகத்தின் குழும இயக்குநரான பேராசிரியர் இங் லீ சிங், இரண்டு முறைகளும் டெங்கியைக் கட்டுப்படுத்துவதில் பலன் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் இம்மாதம் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் டெங்கித் தடுப்பு மாநாட்டில் நேற்று பேசிய திரு இங், சிங்கப்பூர் ஏன் கொசு ஒடுக்குமுறையைப் பின் பற்றுகிறது என்பதற்கு ஐந்து காரணங்களைத் தெரிவித்தார்.
முதலாவதாக, கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்து வதால் டெங்கி பரவும் அபாயம் குறைகிறது என்றார்.
"சிங்கப்பூரில் கொசுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாற்று உத்தியில் அதிக கொசுக்களை இனப்பெருக்கம் செய்ய வேண்டியிருக்கும். பெருமளவில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யப்படுவதால் டெங்கியைப் பரப்பும் கொசுக்களைக் கட்டுப்படுத்துவது இயலாமல் போகலாம்," என்று பேராசிரியர் இங் கூறினார்.
இரண்டாவது, மாற்று உத்தியில் வோல்பாகியாவின் தடுக்கும் ஆற்றலையும் மீறி கிருமி உருமாறி பரவும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
3வது காரணம், ஒடுக்குமுறையில் கடிக்காத ஆண் கொசுக்கள் மட்டும் விடுவிக்கப்படுவதால் மக்களுக்குப் பாதிப்பு இல்லை.
4வது, சிங்கப்பூரின் கொள்கைக்கும் மற்றும் கடந்த அறுபது ஆண்டு களாக வலியுறுத்தப்பட்டு வந்த கொசு உற்பத்தியாகும் இடங்களை அடையாளம் கண்டுபிடித்து குறைக்கும் பொதுச்சுகாதார தகவலுடன் கொசு ஒடுக்குமுறை ஒத்துப்போகிறது. 5வது காரணமாக, கொசு ஒடுக்குமுறையைப் பின்பற்றிய பிறகு மாற்று உத்திக்கு மாறுவது எளிது. ஆனால் மாற்று உத்தியை செயல் படுத்திய பிறகு ஒடுக்கு முறைக்கு மாறுவது சிரமம்.
எது எப்படியிருந்தாலும் இதுவரை வோல்பாகியா திட்டம் சிங்கப்பூரில் வெற்றிகரமாக இருந்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தகவல், கிருமி ஆய்வுக்கான கூட்டு நிலையத்தின் இயக்கு நருமான பேராசிரியர் இங் கூறினார்.

