அறுபது வயதில் பெரும்பாலான ஊழியர்கள் ஓய்வு காலத்திற்குத் தயாராகின்றனர். ஆனால் சுகாதாரப் பராமரிப்பு உதவியாளர் வேலையை அண்மையில் உதறிய ஹென்றி லும், 62வது வயதில் கணினி மென்பொருள் நிபுணராக திட்டமிட்டுள்ளார்.
"மற்றொரு கட்ட வாழ்க்கைக்கு நான் தயாராகி வருகிறேன். என்னால் முன்போல் நடமாட முடியாமல் போகும் நிலையில் என்னால் செய்யக்கூடிய வேலையைச் செய்ய விரும்புகிறேன்," என்கிறார் ஹென்றி லும். கணினி மென்பொருள் நிபுணராகத் தேவையான தகுதிகளைப் பெறும் முயற்சி யில் அவர் இறங்கியுள்ளார்.
மூத்த குடிமக்களை இலக்காகக் கொண்டு நேற்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற 80க்கும் மேற்பட்டவர்களில் ஹென்றி யும் ஒருவர்.
பாசிர் ரிஸ் ஈஸ்ட் சமூக மன்றத்தில் முதியோர்களுக்கான ஒரு நாள் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. சுமார் 800 வேலை வாய்ப்புகளை வழங்கும் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.
பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதியின் வேலை வாய்ப்பு வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 'புராஜெக்ட் சக்ஸஸ்' இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
கொவிட்-19 கொள்ளைநோய் தொடங்கியதிலிருந்து சிங்கப்பூர் முழுவதும் முதியோர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஏ-சோனிக் லாஜிஸ்டிக் விநி யோகிப்பு நிறுவனம், கார்னர்ஸ்டோன் குளோபல் பார்ட்னர்ஸ் எனும் ஆள்சேர்ப்பு நிறுவனம், என்டியுசி எண்டர்பிரைஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றன.
செயல்பாட்டு நிர்வாகிகள், சந்தைமய, பொதுத் தொடர்பு நிர்வாகிகள் முதல் பாதுகாப்பு அதிகாரி, சமையல் உதவியாளர் வரையிலான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
பாசிர்-ரிஸ் பொங்கோல் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஷரேல் தாஹா, பழுத்த அனுபவமும் அறிவாற்றலும் கொண்ட மூத்தோரை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை கொண்டு வந்தோம் என்று குறிப்பிட்டார்.
"மூத்தோர் பலர் தங்களுடைய வயது காரணமாக வேலை வாய்ப்புக்கான நேர்காணல் நடத்தப்படுவதில்லை என்று கூறி வருத்தப்பட்டனர்.
"இளையர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமில் தங்களுக்கு வாய்ப்பு குறைவு என்று சிலர் நம்புகின்றனர்," என்று அவர் கூறினார்.
வேலை வாய்ப்பு முகாமுக்கு வந்திருந்த 61 வயது திருமதி இங் கியோக் லுவான், தன்னுடைய வயதை முதலாளிகளிடம் தெரிவித்தால் வேலை கிடைக்காமல் போக லாம் என்றார்.
"வயது ஆக ஆக இளையர்களுடன் போட்டியிடுவது சிரமமாகி விடுகிறது," என்று அவர் கூறினார்.
இங்கு வேலை வாய்ப்புத் தேடி வந்த ராமசாமி வீரையன், 72, எந்த வேலையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார்.
எண்ணெய், எரிவாயு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அவர், மாதம் 11,000 வெள்ளி வரை சம்பாதித்தார்.
"வருமானம் குறைந்த வேலையில் சேர பெரிய அளவில் வாழ்க்கை பாணியை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது," என்று திரு வீரையன் தெரிவித்தார். இருந்தாலும், தனது குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைவான சம்பளமுள்ள வேலையை ஏற்றுக் கொள்ள இவர் தயாராக இருந்தார்.