நிர்வாகம் மாறிய பிறகு சொகுசுக் கப்பலான 'ஜெண்டிங் டிரிம்' தமது முதல் பயணத்தை நேற்று தொடங்கியது.
உலகின் முதல் அனைத்துலக ஹலால் சான்றிதழ் பெற்ற சமையல் அறை உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் அதன் பயணம் தொடங்கியிருக்கிறது.
முதல் பயணம், மூன்று நாள், இரண்டு இரவுகளைக் கொண்டது. எந்த இடத்திற்கும் செல்லாத அந்த சுற்றுலாக் கப்பல் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வரும். சிப்பந்திகளுடன் ஏறக்குறைய 3,000 பேர் அதில் பயணம் செய்கின்றனர். இந்தக் கப்பலில் 6,000 பேர் வரை பயணம் செய்யலாம்.
"புதிய பெயரில் சரியான தருணத்தில் கிளம்புவது முக்கியம்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த தனிப்பட்ட பேட்டியில் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் குருசஸின் அனைத்துலக விற்பனைப் பிரிவு தலைவரான மைக்கல் கோ தெரிவித்தார்.
"கப்பலை நாங்கள் முழுமையாக நிரப்ப விரும்பவில்லை. அதற்குப் பதிலாக 50 விழுக்காட்டுப் பயணிகளும் முழுமை யான அனுபவம் பெறுவதை உறுதி செய்ய விரும்புகிறோம்," என்றார் அவர். இவ்வாண்டின் தொடக்கத்தில் தாய் நிறுவனமான ஜெண்டிங் ஹாங்காங் மூடப்பட்டதால் பிப்ரவரியில் 'டிரிம் குருஸஸ்' கப்பலின் அப்போதைய உரிமையாளர் நிறுவனத்தை மூட விண்ணப்பித்தார். இதையடுத்து அந்தக் கப்பலின் உல்லாசப் பயணம் சிங்கப்பூரில் முடிவுக்கு வந்தது.
ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்பக் கேட்டனர்.
இந்தச் சமயத்தில் 'ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் குருஸஸ்' நிறுவனத்தின் உரிமையாளரான மலேசிய தொழில் அதிபர் லிம் கோக் டாயே பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் களுக்கு ஈடு செய்ய முன்வந்தார். இதன் பிறகு ஜெண்டிங் டிரிம் சுற்றுலா பயணத்துக்கான முன் பதிவு மே 18ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.
"சவால்கள் இருந்தாலும் உள்ளுர், வெளியூர் சந்தைகளி லிருந்து அதிகமானோர் கப்பலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டினர்.
"உள்ளூர் தேவையைத் தவிர வெளிநாட்டுச் சந்தைகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. உதாரணமாக, சொகுசுக் கப்பல் பயணம் அறிவிக்கப்பட்ட முதல் மூன்று வாரங்களிலேயே இந்தியா விலிருந்து இருந்து மட்டும் 22,000 அறைகளுக்கான முன்பதிவு கிடைத்தன," என்று திரு கோ கூறினார்.
புதிய தொடக்கமாக பல புதிய அம்சங்களையும் டிரிம் குருஸஸ் சேர்த்திருந்தது. அதில் ஹலால் சான்றிதழ் பெற்ற அனைத்துலக சமையல் அறையும் ஒன்று.

