வீவக வீடுகளில் 23வது மாதம்; தனியார் வீடுகளில் 17வது மாதம்
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் மற்றும் தனியார் அடுக்கு மாடி வீடுகளின் வாடகை கடந்த மாதமும் தொடர்ந்து உயரத்தைத் தொட்டன. வாடகையோடு வாடகைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது.
தனியார் கூட்டுரிமை வீடு
களின் வாடகை, ஏப்ரல் மாதம் 2.3 விழுக்காடு உயர்ந்த நிலையில் கடந்த மாதம் 2.8 விழுக்காடு ஏற்றம் கண்டது. எஸ்ஆர்எக்ஸ் மற்றும் 99.co ஆகிய சொத்து நிறு வன இணைய வாசல்களின் முன்னோடி மதிப்பீடுகள் இதனைத் தெரிவித்தன.
வீவக வீடுகளுக்கான வாடகை மே மாதம் 2.4% அதிகரித்தது. அதற்கு முந்திய மாதம் அது 1.9% ஏற்றம் கண்டிருந்தது. தொடர்ச்சியாக 23வது மாதமாக வீவக வீட்டு வாடகை உயர்ந்தது. அதேபோல கூட்டுரிமை வீடுகளின் வாடகை தொடர்ந்து 17வது மாதமாக தொடர்ந்து உயர்ந்தது.
தேவை அதிகமாக இருப்பதாலும் வாடகைக்கு விடப்பட வேண்டிய வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், வரும் மாதங்களிலும் வாடகை உயர்ந்துகொண்டே செல்லும் நிலை காணப் படுவதாக சொத்துச் சந்தைப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
"அதிக வெளிநாட்டினர் வேலைக்குத் திரும்பி இருப்பது எதிர்ப்பார்ப்புக்கு மிஞ்சிய தேவையை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாக வீவக வீடுகளோடு கூட்டுரிமை வீடுகளுக்குமான தேவை அதிகரித்துவிட்டது," என்று 'ஹட்டன்ஸ் ஏஷியா' சொத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் யிப் கூறினார்.
"வாடகை இடைவிடாது ஏற்றம் கண்டாலும் தங்களது நிறுவனம் அந்த வாடகையைச் செலுத்தத் தயாராக உள்ளது என்று வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வருவோரில் பலர் கூறுகின்றனர்," என்றார் அவர்.
சிங்கப்பூரின் மத்திய வட்டாரம், நகரின் விளிம்புப் பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள கூட்டுரிமை வீடுகளின் வாடகை கூடியது. இவற்றில் புறநகர்ப் பகுதி வீடுகளின் வாடகை அதிவேகமாக 3.3% ஏற்றம் கண்டது. மொத்த கூட்டுரிமை வாடகை வீடுகளில் 41.1% புறநகர்ப் பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

