இடித்துக்கொண்டிருந்த சுவர் விழுந்து பங்ளாதேஷ் ஊழியர் மரணம்

இடித்துக்கொண்டிருந்த சுவர் விழுந்து பங்ளாதேஷ் ஊழியர் மரணம்

2 mins read
a5850d83-6313-4585-b60e-8d9cebae0725
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தனியார் தரைவீட்டில் சுவரை இடித்துக் கொண்டிருந்த 41 வயது பங்ளாதேஷ் ஊழியர் மீது சுவரின் ஒரு பகுதி விழுந்ததால் அவர் உயிர் இழந்தார்.

அவரை விடுவித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், அவர் மாண்டுவிட்டதாக சம்பவ இடத்தில் தெரிவித்தனர்.

அந்தச் சம்பவம் ஜூன் 10ஆம் தேதி அன்று லோரோங் சுவான் அருகில் உள்ள 44 தாய் ஹுவான் ஹைட்ஸ் எனும் முகவரியில் நடந்தது.

அது குறித்து வேலையிடப் பாதுகாப்பு சுகாதார மன்றம் எச்சரிக்கையை வியாழக்கிழமை (ஜூன் 16) அன்று விடுத்தது.

மனிதவள அமைச்சு அந்த விபத்தை விசாரித்து வருகிறது.

அந்த இடம், பியாவ் ஹாக் என்ஜினியரிங் எனும் நிறுவனத்தின் வசம் இருப்பதாக அமைச்சு கூறியது.

அந்த இடத்தில் எல்லா பணிகளையும் நிறுத்தும்படியும் அது நிறுவனத்திடம் கூறியுள்ளது.

மாண்ட ஊழியரின் முதலாளி சாம் யூ என்பவர் என்றும் அது குறிப்பிட்டது.

பொதுவாக ஆண்டின் இந்த காலகட்டத்தில் வேலையிடக் காயங்கள் அதிகரிப்பதாக வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் குறிப்பிட்டது. அபாயங்களுக்கு எதிராக விழிப்புடன் இருந்து

விபத்துகளைத் தவிர்க்கும்படி அது தொழில்துறையை எச்சரித்தது.

இந்த ஆண்டு இதுவரை 26 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ஒரு கட்டடத்தை இடிப்பது, அதிக ஆபத்தைக் கொண்ட கட்டுமானப் பணி என்றும் வேலை தொடங்குவதற்கு முன்னர் முறையான திட்டங்களும் நடவடிக்கைகளும் வகுக்கப்பட வேண்டும் என்றும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் கூறியது.