தனியார் தரைவீடு ஒன்றின் சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதன் ஒரு பகுதி தம் மீது இடிந்து விழுந்ததில் 41 வயது பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்கள், அந்த ஊழியரை இடிபாடுகளில் இருந்து விடுவித்தனர். ஆனால், சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அவர்கள் கூறினர்.
ஜூன் 10ஆம் தேதி மாலை 4.30 மணியளவில், எண் 44 தை ஹுவான் ஹைட்ஸ் எனும் முகவரியில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சு கூறியது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் அமைச்சு, அங்கு வேலை நிறுத்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஆண்டின் இந்தக் கட்டத்தில் வேலையிட விபத்துகள் அதிகரிப்பதாக வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. வேலையிட விபத்துகளுக்கு எதிராக கவனத்துடன் இருக்குமாறு கட்டுமானத் துறைக்கு அது அறிவுறுத்தியது.
சுவரை இடிக்கும் பணிகள் அதிக இடர் உடைய நடவடிக்கைகள் என்பதைச் சுட்டிய மன்றம், பணியைத் தொடங்குவதற்கு முன்பு முறையான திட்டங்களும் நடைமுறைகளும் நடப்பில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது.
இவ்வாண்டு வேலையிட விபத்துகளில் இதுவரை 26 பேர் உயிர் இழந்துவிட்டனர்.

