விமானப் போக்குவரத்துத் துறை மேலும் மீட்சியடைவதற்குத் தயாராகும் விதமாக, சாங்கி விமான நிலையத்தில் 'சேட்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் ஆள்சேர்ப்பு முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளன.
தொடக்கக் கட்டமாக அதன் 600 காலிப் பணியிடங்களில் பெரும்பாலானவை நிரப்பப்பட்டுவிட்டதாக சேட்ஸ் தெரிவித்து உள்ளது.
பயணச் செயல்பாடுகள், உணவுத் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு தான் ஆளெடுப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அது கூறியது.
டினேட்டா, செர்டிஸ், ஸ்கூட் ஆகிய நிறுவனங்களும் நூற்றுக்கணக்கில் ஆளெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலின் தொடக்கத்திலிருந்து சிங்கப்பூரில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. என்றாலும், இத்துறை முழுமையாக மீட்சி அடைய இன்னும் சற்று காலம் ஆகும்.
போட்டித்தன்மைமிக்க சம்பளம், செயல்திறன் அடிப்படையிலான வெகுமதிகள் போன்ற ஊக்குவிப்புகள் மூலம் புதிய ஊழியர்களை ஈர்க்கவும் ஏற்கெனவே உள்ளவர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் சேட்ஸ் நிறுவனம் முற்படுவதாக அதன் தலைமை மனிதவள அதிகாரி லிலியன் டான் கூறினார்.
கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் 35,000க்கும் அதிகமான ஊழியர்களை விமானப் போக்குவரத்துத் துறை இழந்தது. கொவிட்-19க்கு முன்பிருந்த ஊழியரணியுடன் ஒப்புநோக்க, ஆண்டிறுதிக்குள் 85 முதல் 90 விழுக்காட்டை எட்ட இத்துறை இலக்கு கொண்டு உள்ளது.
தன் நிறுவனத்தில் பணிபுரிய 300க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக 'டினேட்டா' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முஸ்தலிஃபா அப்துல்லா கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து 250க்கும் அதிகமான விமானச் சிப்பந்திகளை தன் நிறுவனத்தில் சேர்த்துள்ளதாக ஸ்கூட் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்குள் மேலும் 900 விமானப் பணியாளர்களைச் சேர்க்க அது திட்டமிடுகிறது.

