சோதனைச்சாவடிகளில் மாத இறுதிவரை போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம்
ஜூன் பள்ளி விடுமுறை தொடங்கியதிலிருந்து உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்து வருகிறது. கடந்த வாரயிறுதியில் நாள் ஒன்றுக்கு 267,000 பேர் சிங்கப்பூர்-மலேசியா எல்லைகளைக் கடந்தனர். ஒப்புநோக்க, அதற்கு முந்தைய வாரயிறுதியில் இந்த எண்ணிக்கை 262,000 ஆக இருந்தது. விசாக தின வாரயிறுதியில் இந்தத் தினசரி எண்ணிக்கை 224,000 ஆகவும் புனித வெள்ளி வாரயிறுதியில் இது 149,000 ஆகவும் இருந்தது.
இந்த மாதம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தது.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாக மலேசியா சென்று வருபவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி அமைக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியது.
குடிநுழைவுச் சோதனையைக் கடக்க கூடுதல் நேரத்தைக் கருத்தில் கொள்ளுமாறும் உச்ச நேரங்களைத் தவிர்க்குமாறும் ஆணையம் கூறியது. தனியார் வாகனங்களில் செல்வதற்குப் பதிலாக பொதுப் பேருந்துகளில் எல்லையைக் கடக்கலாம் என்றும் அது சொன்னது.
மூத்த அரசாங்க வழக்கறிஞர்
ஜி.கண்ணன் காலமானார்
மூத்த அரசாங்கத் தரப்பு வழக்கறிஞரான திரு
ஜி.கண்ணன் (படம்) கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். இவருக்கு வயது 52. விடுமுறையைக் கழிக்க தம் குடும்பத்தாருடன் தாய்லாந்தின் புக்கெட் தீவுக்குச் சென்றபோது அங்கு இவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
"இது எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஆகவே, நாங்கள் இத்துயரத்திலிருந்து தொந்தரவு இல்லாமல் மீண்டு வர எங்களுக்கு உதவுமாறு திரு கண்ணனின் குடும்பத்தார் கேட்டுக்கொண்டனர்," என்று அக்குடும்பத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் குற்றவியல் பிரிவின் மூத்த இயக்குநராகவும் திரு கண்ணன் பதவி வகித்தார்.
வெளிநாட்டு விடுப்பில் சென்றபோது ஏற்பட்ட விபத்து ஒன்றில் திரு கண்ணன் உயிரிழந்ததாக தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
1995ல் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் சேர்ந்த இவர், அரசாங்கத் தரப்பு வழக்கறிஞராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றிருந்தார். மனிதவள அமைச்சின் சட்டச் சேவைகள் துறையில் ஐந்து ஆண்டுகளாக இவர் பணியாற்றி இருந்தார்.
2018ல் தேசிய தினத்தையொட்டி, இவருக்கு நீண்டகால சேவை பதக்கம் வழங்கப்பட்டது.
திரு கண்ணனின் மறைவுக்கு சட்டத் துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

