கடன் வசூலிப்போருக்கு காவல்துறை உரிமம் கட்டாயமாகிறது

கடன் வசூலிப்போருக்கு காவல்துறை உரிமம் கட்டாயமாகிறது

2 mins read
ba14d606-ba9c-4727-97fd-e02157026123
-

சிங்கப்பூரில் கடன் வசூலிக்கும் நிறுவனத்தை நடத்துவதற்கு காவல்துறை உரிமம் தேவைப்படலாம்.

அத்தகைய அமைப்புகளின் செயல்களை ஒழுங்குபடுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டு உள்ள புதிய சட்டங்களின்கீழ் வரும் பல விதிமுறைகளில் ஒன்று அந்த உரிமத்தைக் கட்டாயமானதாக்கும்.

கடனாளியிடம் இருந்துதான் கடன் தொகை வசூலிக்கப்படுகிறது என்பதைக் கடன் வசூலிப்போர் முதலில் உறுதிப்படுத்த வேண்டும். உள்துறை அமைச்சு புதன்கிழமை வெளியிட்ட உத்தேச விதிமுறைகள் மூலம் இவை தெரியவருகின்றன.

கடன் வசூலிப்போர் கடனாளி யிடம் மிரட்டல் விடுப்பதுபோல் கெடுபிடி போக்கில் நடந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

பேசுவது, எழுதிக் காட்டுவது, அறிகுறி காட்டுவது, கண்கூடான நடத்தைகள் எல்லாம் இவற்றில் அடங்கும் என்று அமைச்சு தெரிவித்தது.

கடன் வசூலிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக காவல்துறையிடம் தாக்கல் செய்யப்பட்ட புகார்கள் அதிகரிப்பதாக பிரச்சினை எழுப்பப்பட்டு இருக்கிறது. அத்தகைய நிறுவனங்களும் அவற்றின் ஊழியர்களும் பொதுமக்களுக்குத் தொல்லை தருகிறார்கள், பயமூட்டுகிறார்கள் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.

கடந்த 2015ல் இத்தகைய 134 புகார்கள் தாக்கலாயின. இவற்றின் எண்ணிக்கை 2018ல் 590 ஆகியது. என்றாலும் சென்ற ஆண்டில் எண்ணிக்கை குறைந்து 272 புகார்கள் தாக்கலாயின. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அமைச்சின் பரிந்துரைகள் இடம்பெறுகின்றன.

தான் முன்வைத்துள்ள யோச னைகள் பற்றி பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை உள்துறை அமைச்சு நாடுகிறது.

கொடுத்த பணத்தை வசூல் செய்வது என்பது சட்டபூர்வமான ஒரு காரியம்தான் என்பதை அமைச்சு அங்கீகரிக்கிறது.

இருந்தாலும் கவலை அதிகரிப்பதால் இந்தத் தொழில்துறையில் ஒழுங்குமுறை ஏற்பாடுகளை நிலைநாட்ட வேண்டிய தேவை இருக்கக்கூடும் என்றது அமைச்சு.

கடனை வசூல் செய்யும் தொழிலை நடத்த விரும்புவோர் முதலில் காவல்துறையிடம் இருந்து உரிமம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அத்தகைய நிறுவனங்களில் வேலை பார்க்க விரும்புவோர் நிறுவனத்துடன் சேர்ந்து அங்கீகாரத்திற்குக் கூட்டாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தப் பரிசோதனை நடைமுறை இதர பல ஒழுங்குமுறை ஏற்பாடுகளுக்கான விண்ணப்ப நடைமுறைகளை ஒத்ததுதான் என்று அமைச்சு விளக்கியது.

உரிமம் பெற்ற கடன் வசூல் நிறுவனங்கள் பல விதிமுறைகளுக்கும் உட்பட்டு நடக்க வேண்டும்.

கடனாளியுடன் கூடிய உடன்பாடுகள் போன்ற பதிவேடுகளை வைத்திருப்பது உள்ளிட்ட பல விதிமுறைகளும் இவற்றில் அடங்கும்.