எரிபொருள்: ஆணையத்தின் நடவடிக்கைகள் நீட்டிப்பு

எரிபொருள்: ஆணையத்தின் நடவடிக்கைகள் நீட்டிப்பு

2 mins read
ef415f04-e9d0-4c69-85b1-e96ee215758a
-

எரிபொருள் இருப்பை உறுதிப்படுத்தி, விலையைக் கட்டுப்படுத்த முயற்சி

சிங்கப்பூரில் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தவும் எரிபொருள் விலையை நிலைப்படுத்தவும் ஏற்கெனவே தான் நடப்புக்கு கொண்டு வந்த நடவடிக்கைகளை எரிசக்தி சந்தை ஆணையம் 2023 மார்ச் வரை நீட்டித்து உள்ளது.

மின்சார கட்டணம் அதிகரிக்கிறது. இதைப் பொறுத்தவரை கேடயமாக இருந்து பயனீட்டாளர்களைத் தன்னால் காக்க இயலாது என்று ஆணையம் கூறியது.

அதேவேளையில், உலக நிலவரம் காரணமாக சிங்கப்பூரில் மின் விநியோகமும் உள்ளூர் எரிசக்திச் சந்தைகளின் செயல்பாடும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பது உயிர்நாடியானது என ஆணையம் குறிப்பிட்டது.

இந்த ஆணையம் சென்ற ஆண்டு செப்டம்பரில் பல நடவடிக்கைகளை அமல்படுத்தியது.

நிறுவனங்கள் திரவ இயற்கை எரிவாயுவைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். எரிசக்தி தயாரிப்பு நிறுவனங்கள் போதிய அளவுக்கான எரிபொருளை நிலைநாட்டி வரவேண்டும் ஆகியவை அவற்றில் உள்ளடங்கும்.

அதேவேளையில், சந்தை விதிமுறைகளும் திருத்தப்பட்டன. இவற்றோடு, தற்காலிக மின் ஒப்பந்த ஆதரவு திட்டத்தையும் ஆணையம் நீட்டிக்கிறது.

மொத்த விற்பனை மின் சந்தையில் விலைகள் ஏறி இறங்குவதால் அதிகளவில் எரிசக்தியைப் பயன்படுத்துவோருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைத்துக்கொள்ள அந்த ஆதரவுத் திட்டம் உதவுகிறது.

கடைத்தொகுதிகள், காப்பிக்கடைகள் போன்றவை இத்தகைய பயனீட்டாளர்களில் உள்ளடங்கும்.

செம்ப்கார்ப் பவர் நிறுவனமும் கெப்பல் எலக்ட்ரிக் நிறுவனமும் சராசரியாக குறிப்பிட்ட அளவிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் பயனீட்டாளர்களுக்குத் தொடர்ந்து நீண்டகால நிலையான கட்டண திட்டங்களை வழங்கும் என்றும் ஆணையம் தெரிவித்து உள்ளது.

சூழ்நிலையை ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வரும். தேவை எனில் இந்த நடவடிக்கைகள் மேலும் நீட்டிக்கப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டு உள்ளது.

சிங்கப்பூர் தன்னுடைய மின்சார தேவையில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டுக்கு இறக்குமதியாகும் இயற்கை வாயுவைச் சார்ந்துள்ளது.

உலகம் முழுவதும் எரிவாயு விலை சென்ற ஆண்டு செப்டம்பர் முதல் கூடியது.

இந்த நிலையில், உக்ரேன்-ரஷ்யா போர் காரணமாக எரிவாயு, எண்ணெய் விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்படும் ஆபத்தும் அதிகரித்துவிட்டது.