செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c91d831e-6dd5-4893-9ac0-51aa9568b2c9
-

கோழி: சிங்கப்பூர் பரிசீலனை

சிங்கப்பூருக்கு கோழி ஏற்றுமதி செய்ய மலேசியா கட்டுப்பாடு விதித்துள்ளதால் அங்கிருந்து கோழி வரத்து தடைபட்டுள்ளது. இதனால் இந்தோனீசியாவில் இருந்து கோழிகளை வாங்கும் சாத்தியம் பற்றி சிங்கப்பூர் ஆராய்கிறது. இதன்தொடர்பில் சிங்கப்பூர் உணவு அமைப்பு இந்தோனீசிய அதிகாரிகளுடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் கேட்டதற்கு உணவு அமைப்பு இவ்வாறு பதிலளித்து உள்ளது.

இந்தோனீசியா இதுவரை சிங்கப்பூருக்கு கோழிகளை விற்றதில்லை. உப்பிடப்பட்ட முட்டைகளை மட்டுமே மாதம் மொத்தம் கிட்டத்தட்ட 50,000 வரை சிங்கப்பூருக்கு இந்தோனீசியா ஏற்றுமதி செய்து வருகிறது.

முதியவருக்குச் சிறை, அபராதம்

வோங் சோங் வெங், 71, என்ற முதியவர் மின்ஸ்கூட்டரில் சட்டவிரோதமாகச் சாலையில் சென்று கொண்டிருந்தார். அதை நிலப் போக்குவரத்து அமலாக்க அதிகாரிகள் பார்த்துவிட்டார்கள். அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க அந்த முதியவர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி மின்ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றார். அவருடைய மின்ஸ்கூட்டரின் கைப்பிடிக் கம்பி அதிகாரிகளில் ஒருவரின் மார்பில் குத்தி சிராய்ப்புக் காயங்களை ஏற்படுத்திவிட்டது.

வோங்கிற்கு மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு, $1,400 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் 2019 அக்டோபர் 29ஆம் தேதி பிற்பகலில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

படம் எடுத்தார்; 16 வாரம் சிறை

அக்கம்பக்கத்தினர் மூன்று பேர் குளிப்பதைப் படம் எடுத்ததற்காக டோக் ஸி ஸியாங், 22, என்ற ஆடவருக்கு 16 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வர்களில் எட்டு வயது சிறுமியும் ஒருவர். குற்றச்செயல்கள் 2021 பிப்ரவரி 9ஆம் தேதியும் மார்ச் 7ஆம் தேதியும் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.