தெம்பனிஸ் ஸ்திரீட் 21 காப்பிக்கடை சாதனை; $41.68 மில்லியன் விலைக்கு விற்கப்பட்டது

தெம்பனிஸ் ஸ்திரீட் 21 காப்பிக்கடை சாதனை; $41.68 மில்லியன் விலைக்கு விற்கப்பட்டது

2 mins read
511486b3-3554-4c9f-8231-c7f61913aa5a
தெம்பனிஸ் ஸ்திரீட் 21ல் இருக்கும் காப்பிக்கடை சாதனையாக S$41.68 மில்லியன் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக 8வேர்ல்ட் இணையத் தளம் தெரிவிக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தெம்பனிசில் செயல்டும் ஒரு காப்பிக்கடை, சாதனையாக $41.68 மில்லியன் விலைக்கு விற்கப்பட்டு உள்ளதாக 8வேர்ல்ட் இணையத் தளம் தெரிவித்து உள்ளது.

அந்தக் காப்பிக்கடை தெம்பனிஸ் ஸ்திரீட் 21ல் உள்ள புளோக் 201ல் செயல்படுகிறது.

அதை வாங்கி இருப்பவர் சிங்கப்பூர் நில ஆணையத்திடம் அதற் கான தற்காப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். பணப் பட்டுவாடா ஜூலையில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 11ல் உள்ள புளோக் 155ல் செயல்படும் ஒரு காப்பிக்கடை 2015ல் $31 மில்லியனுக்குக் கைமாறியது. இது அப்போது பரபரப்பு செய்தியாக இருந்தது. அந்தச் சாதனை இப்போது முறியடிக்கப்பட்டு உள்ளது.

தெம்பனிஸ் காப்பிக்கடையின் குத்தகைக் காலத்தில் இன்னமும் 76 ஆண்டுகள் மீதம் உள்ளன என்று ஆணையம் தெரிவித்தது.

மொத்தம் 604 சதுர மீட்டர் பரப்பளவு இடத்தில் அமைந்துள்ள அந்தக் கடை அப்பகுதியில் ஆகப்பெரியதாகும்.

கடை விற்கப்பட்ட விலையைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு சதுர அடி S$6,964 கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

ஆர்ச்சர்ட் ரோட்டின் ஃபார் ஈஸ்ட் பிளாசா, லக்கி பிளாசாவில் உள்ள வர்த்தக இடங்களின் விலையுடன் இது ஒத்து இருக்கிறது என்று 8வேர்ல்ட் தெரிவித்துள்ளது.

ஈஆர்ஏ சிங்கப்பூர், நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவற்றின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அது இவ்வாறு குறிப்பிட்டு உள்ளது.

இதனிடையே, அந்தக் காப்பிக்கடை ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன் புது நிர்வாகத்தின்கீழ் வந்தது என்றும் புதிய நிர்வாகம் வாடகையை ஏற்றிவிட்டதாகவும் அந்தக் காப்பிக்கடையில் கடைகளைக் குத்தகைக்கு எடுத்து இருப்போர் கூறியதாக 8வேர்ல்ட் தெரிவித்தது.

அதனால் இந்த மாதத்துடன் வாடகை உடன்பாடுகளை முடித்துக் கொள்ளலாம் என்று பலரும் முடிவு செய்துள்ளதாகவும் அது கூறியது.