ஜாலான் புசாரில் ஒரு வீட்டில் சேர்ந்து வசித்து வந்த இரண்டு மாதர்களுக்கு இடையில் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. அந்த இரண்டு மாதர்களில் ஒருவரான இயாப் கிம் கோ, 73, என்பவருக்கும் அந்த வீட்டின் உரிமையாளர்களுக்கும் தொடர்பு இருந்து வந்தததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த மாதுடன் சேர்ந்து அதே வீட்டில் வசித்து வந்த திருவாட்டி ஜின் பிங்பிங் என்ற மாதுவும் முன்பு அந்த வீட்டு உரிமையாளரின் காதலியாக இருந்து வந்தார் என்பதற்கான அறிகுறி உண்டு என்று அரசுத் தரப்பு இந்த வழக்கு விசாரணையில் தெரிவித்தது.
அந்த இரண்டு மாதர்களுக்கு இடையில் நிலவிய பிரச்சினைக்கு இதுவும் காரணம் என்று விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி ஜின்னின் வயது, அந்த வீட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இரண்டு மாதர்களுக்கும் இடையில் நிலவி வந்த பதற்றம் 2020 பிப்ரவரி 4ஆம் தேதி சூடுபிடித்தது. மலேசியரான இயாப் சுடச்சுட இருந்த கஞ்சியை திருவாட்டி ஜின் மீது விசிறியடித்துவிட்டதாகவும் இதனால் அவருக்குக் காயம் ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு மாத காலம் திருவாட்டி ஜின் வலியால் அவதிப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜாலான் புசாரில் இருக்கும் கடைவீடு ஒன்றின் மேல் தள வசிப்பிடத்தில் அந்த இரண்டு மாதர்களும் வசித்து வந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் ஜூன் 30ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

