சிங்கப்பூரில் இவ்வாண்டு முதல் காலாண்டில் வேலை வாய்ப்புகள் அதிகரித்தன. மார்ச் மாத நிலவரப்படி 128,100 வேலை வாய்ப்புகள் இருந்தன. சென்ற டிசம்பருடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை 117,100. மனிதவள அமைச்சு இந்தப் புள்ளிவிவரங்களை இன்று வெளியிட்டது.
பெரும்பாலான வேலைகள் கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகளில் பிஎம்இடி எனப்படும் பட்டத்தொழிலர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுணுக்கர்கள் அல்லாத பதவிகள் எனக் கூறப்பட்டது.
நிதி, தகவல் தொடர்பு, கல்வி, தொழில் நிபுணத்துவம், பொதுத்துறை நிர்வாகம் ஆகிய துறைகளில் பிஎம்இடி பிரிவினருக்கு தேவை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் சிங்கப்பூர்வாசிகளுக்கான வேலையின்மை விகிதம் 3.1 விழுக்காடு. முதல் காலாண்டில் ஆட்குறைப்பு எண்ணிக்கை 1,320 ஆகக் குறைந்தது.

