பிரபல காற்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்கமைக் காண இன்று மாலை நான்கு மணியளவில் ஆர்ச்சர்ட் சாலையில் மக்கள் திரண்டனர்.
அடிடாஸ் நிறுவனத்தின் கடையில் 'வீ காட் திஸ்' எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பெக்கம்.
சிங்கப்பூர் காற்பந்து வீரர் இக்ஸான் ஃபான்டி, சமூக ஊடக பிரபலம் ஜேட் ரஸிஃப், கிறிஸ்டபெல் சுவா ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
"நோய்ப் பரவல் சூழலிலிருந்து எப்படி மீண்டு வருவது என்றும் மனநலம் குறித்தும் பெக்கம் பேசினார். அவரைப் பற்றிய சுவாரசிய கருத்துகளையும் பகிர்ந்தார்," என்று கூறினார் கலந்துரையாடலில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்த சிலரில் ஒருவரான ராஜ், 22.
"பெக்கமை நான் நேரில் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்," என்றார் இணையப் போட்டியில் வென்று நுழைவுச்சீட்டைப் பெற்ற ராஜ்.
'அடிடாஸ்' நிறுவனம் நடத்திய போட்டியில் கலந்துகொண்டு வென்ற 40 பேருக்கு கலந்துரையாடலில் பங்கேற்ற வாய்ப்பு கிடைத்தது.
நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் நேரம் முதல் முடியும் வரையிலும் 'அடிடாஸ்' கடையைச் சுற்றி மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர்.
கலந்துரையாடலுக்குப் பின் கடையின் உள்ளே இருந்தபடியே வெளியே காத்திருந்த ரசிகர்களுக்குத் தன் கைகளை அசைத்தார் டேவிட் பெக்கம்.
செய்தி: யுகேஷ் கண்ணன்

