அக்னிப் பாதையை போராட்ட பாதையாக்கிய இந்திய இளையர்கள்

அக்னிப் பாதையை போராட்ட பாதையாக்கிய இந்திய இளையர்கள்

4 mins read
f2e79b4c-e1ef-4f57-8049-827e46cc7cf0
-

முரசொலி

தெற்கு ஆசிய நாடான இந்­தியா நிலப்­ப­ரப்­பில் உல­கி­லேயே ஏழா­வது ஆகப் பெரிய நாடு. மக்­கள் தொகை­யில் இரண்­டா­வது ஆகப் பெரிய நாடு. மிகப் பிர­ப­ல­மான மிகப்பெரிய ஜன­நா­யக நாடு.

பொரு­ளி­ய­லைப் பொறுத்­த­வரை உல­கில் மிக வேக­மாக வளர்ந்து வரும் நாடு. சந்தை பரி­வர்த்­தனை விகி­தங்­க­ளின்­படி, இந்­தியா உல­கின் ஆறாவது ஆகப் பெரிய நாடாக இருந்து கடந்த 20 ஆண்டு­களில் ஆண்­டுக்­குச் சரா­ச­ரியாக 5.5% வளர்ச்சி கண்­டு­வ­ரும்­ நாடு. விவ­சா­யத்தை அதிகம் சார்ந்­துள்ள நாடு.

அந்த நாட்டில் சுமார் 139 கோடி மக்­கள் வசிக் கிறார்­கள். இளை­யர்­கள் அதி­கம். அவர்­கள் அதிக தொழில்­நுட்ப நாட்­டம் உடை­ய­வர்­கள். அதே வேளை யில் வய­தான நடுத்­தர வய­தி­லான தொழில்­நுட்ப நாட்டம் கு­றை­வான மக்­களும் இருக்­கி­றார்­கள்.

அவர்­கள் எல்­லா­ருக்­கும் நிரந்தர வேலை வாய்ப்பு களை உரு­வாக்க அர­சாங்­கம் முடி­யாது என்­பது நடை­முறை உண்மை. ஆனா­லும் தன் சூழ­லுக்கு ஏற்ப இந்­திய அரசு பல்­வேறு வகை வேலை வாய்ப்பு களை உரு­வாக்கி வரு­கிறது. படிக்­காத, கிரா­மப் புற வய­தான, நடுத்­தர வயது ஆண்கள், பெண்­க­ளுக்­காக நாளுக்கு 275 ரூபாய் ஊதி­யத்­து­டன் 100 நாள் வேலை திட்­டம் என்ற ஒரு திட்­டத்தை அர­சாங்­கம் நடைமுறைப்­ப­டுத்தி வரு­கிறது.

அதே­போல் தொழில்­நுட்ப நாட்­டத்­து­டன்­கூ­டிய இளை­யர்­க­ளின் வளம் செம்மை­யா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்­ளப்­பட வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் 'அக்­னிப் பாதை' என்ற ஒரு திட்­டத்தை இம்­மா­தம் மாதம் 14ஆம் தேதி அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்­தது. அந்­தத் திட்­டம் உட­ன­டி­யா­கத் தொடங்­கப்­படும் என்­றும் அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

குடி­மக்­கள் அனை­வ­ருக்­கும் நிரந்­த­ர­மான வேலை வாய்ப்பை எந்த ஒரு நாடும் ஏற்­ப­டுத்­தித் தர இய­லாது என்­பது திண்­ணம். இளை­யர்­க­ளுக்கு குறிப்பாக 17.5 வயது முதல் 23 வரை வயதுள்ள இளை­யருக்கு குறு­கிய கால­கட்­டத்­திற்­கா­வது வேலை கொடுத்­தாக வேண்டும் என்­ப­தால் அரசு அதற்­கான ஏற்­பா­டாக அக்­னிப் பாதை திட்­டத்தை அறி­வித்­தது.

ஆற்­றல்­மிக்க இளை­யர்­க­ளுக்கு நான்கு ஆண்டு காலம் ராணு­வத்­தில் வேலை கொடுத்து, அவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தி, அவர்­க­ளுக்­குப் புதிய புதிய தக­வல் தொழில்­நுட்­பங்­க­ளைப் போதித்து, நாட்­டுப் பற்றை, ஆக்­கக­ர­மான மனப்­போக்கை வளர்­த்து கையில் போதிய அள­வுக்கு-அதா­வது ஏறக்­குறைய 1.3 மில்­லி­யன் ரூபாய் பணத்­தை­யும் கொடுத்து புடம் போட்ட தங்கக் குடி­ம­க­னாக ஆக்கி சமூ­கத்­தி­டம் ஒப்­ப­டைக்­கும் விதத்­தில் அத்­திட்­டம் உரு­வாக்­கப்­பட்டு உள்­ள­தாக அர­சு அறி­வித்­துள்­ளது.

அக்­னிப் பாதை திட்டத்தின்படி ஆண்­டுக்கு 46,000 பேர் சேர்த்­துக்­கொள்­ளப்­படு­வார்­கள். மாதச் சம்­ப­ளம் சந்தை நில­வ­ரத்­துக்கு ஏற்ப இருக்­கும். அவர்­களில் ஆற்­றல் மிகுந்த கால்­வாசிப் பேருக்கு ராணு­வத்­தில் தொடர்ந்து மேலும் 15 ஆண்­டு­கா­லம் பணி­யாற்ற வாய்ப்பு கொடுக்­கப்­படும்.

இந்­திய ராணு­வம் 1.4 மில்­லி­யன் வீரர்களைக் கொண்டது. ராணுவ வீரர்­கள் பொது­வாக 17 ஆண்டு காலம் பணி­யாற்றி ஓய்வு பெற்று ஓய்­வூதி­யம் பெறு கிறார்­கள். ராணு­வத்­தின் செல­வில் ஓய்­வூதி­யச் செலவு தாக்­குப்­பி­டிக்க இய­லாத நிலையை எட்டி விட்டது. இதைக் குறைக்க வேண்­டும் என்­ப­தும் அக்னிப் பாதை­யின் நோக்­கம்.

ஆனால் அக்­னிப் பாதை திட்­டம் அதற்­குள்­ளா­கவே அக்னிப் போராட்­ட­மாக மாறி­விட்­டது. எங்­களுக்கு நிரந்­தர வேலை வேண்­டும், ஓய்­வூ­தி­யம் வேண்­டும்; இதர அரசு ஊழி­யர்­க­ளைப் போலவே வாழ்க்கை முழுமைக்கும் உத்­த­ர­வா­தம் வேண்­டும் என்று இளை­யர்­கள் கேட்­கி­றார்­கள்.

ஏற்­கெ­னவே ராணு­வத்­திற்கு வழக்­க­மான நடை­மு­றைப்­படி தேர்ந்து எடுக்­கப்­பட்டு பயிற்சி பெற்று வரு­வோர், தங்­கள் கதி என்ன ஆகுமோ என்று அச்­சப்­ப­டு­கி­றார்­கள். குறிப்­பாக எதிர்க்­கட்சி அர­சி­யல் வாதி­கள் திட்­டத்தை எதிர்க்­கி­றார்­கள்.

வெறும் ஆறே மாதம் பயிற்சி கொடுத்து ராணுவத்­திற்­குத் தற்­கா­லி­க­மாக வீரர்­களைச் சேர்க்­கும் அக்னிப் பாதைத் திட்­டம் இந்­திய ராணு­வத்தைப் பல­வீ­னப்­படுத்­தி­வி­டும் என்று சில அர­சி­யல் கட்சி­களும் அரசியல்வாதிகளும் கருத்து கூறு­கிறார்கள்.

இவை எல்­லாம் சேர்ந்து அதற்­குள்­ளா­கவே அக்னிப் பாதை திட்­டத்தை அக்னி போராட்­ட­மாக மாற்­றி­விட்­டன. பீகா­ரில் தொடங்­கிய போராட்­டம் வன்­செ­ய­லாக மாறி­யது. எட்டு மாநி­லங்­க­ளுக்­குப் பரவி, ரயில்­கள், பேருந்­து­கள் அழிக்­கப்­பட்­டன. அர­சாங்கச் சொத்­து­கள் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன. நிலைமை துப்­பாக்­கிச் சூடு நடத்­தும் அளவுக்குப் போய் ஒரு­வர் பலி­யாகிவிட்­டார்.

உலக அள­வில் பொரு­ளி­யல், சமூக சூழ்­நி­லை­கள் எவ்­வ­ளவோ மாறி­விட்­டன. மாறி வருகின்­றன. போதா­தற்கு கொவிட்-19 தொற்று பல­வற்றையும் புரட்­டிப்போட்­டு­விட்­டது. ஆனால் இந்­தி­யா­வைப் பொறுத்­த­வரை இந்த மாற்­றங்­கள் அந்த நாட்­டின் மக்­க­ளை முழுமையாகச் சென்று அடைந்து இருக்­கின்­ற­னவா என்­பது சந்­தே­க­மா­கவே உள்­ளது.

எந்த ஓர் அர­சாங்­க­மும் அது­வும் இந்­தியா போன்ற பன்­மய நாட்டை ஆளும் அர­சாங்­கம் எது­வும் தன் நாட்டு மக்­கள் அனை­வ­ருக்­கும் நிரந்­த­ர­மாக வேலை வாய்ப்­பு­களை அளித்து ஓய்வு பெற்று மர­ணம் அடையும்வரை அவர்­க­ளின் வரு­வாய்க்கு வழி செய்­யும் என்­பது இனி நினைத்­துப் பார்ப்­ப­து­கூட இயலா­த­தா­கவே இருக்­கும்­.

இதை குறிப்பாக இந்­திய இளை­யர்­கள் உண­ர­வேண்­டும். இளை­யர்­க­ளின் சக்தி இமா­லய சச்தி. அந்த சக்தி இப்­போது முற்­றி­லும் ஆக்க சக்­தி­யாக இல்லை. அழிவு சக்­தி­யாக ஆவ­தில் எந்­தப் பய­னும் இல்லை. ஓர் அரசு அமல்­ப­டுத்­தும் ஒரு திட்­டம் அதிக பயன் தராத ஒரு திட்­ட­மாக இருக்­கும் என்றாலும்கூட அதை எதிர்ப்­ப­வர்­கள் வன்­செயல்­களில், அழிவு செயல்­களில் ஈடு­படக்கூடாது.

இந்­தியா போன்ற வள­ரும் நாடு­களில் இளை­ஞர்­கள் அழிவு சக்­தி­யாக மாறு­வது அந்த நாட்­டிற்கு மிகப் பெரிய பாதிப்­பாக உரு­வெ­டுக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை. அக்­னிப் ­பாதை திட்­டத்தின் நன்மை, தீமை­கள் எப்­படி இருக்­கும் என்­பதைப் பொறுத்­திருந்துதான் பார்க்க வேண்­டும்.

அந்­தத் திட்­டம் விரும்­பிய பலனை ஏற்­ப­டுத்­தித் தராது என்­பது திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­ய­வந்­தால் அர­சாங்­கம் அதைக் கைவிட வேண்­டும் அல்­லது திருத்­தங்­க­ளைச் செய்ய வேண்­டும். அக்னிப் பாதை வீரர்களுக்கு மத்திய ராணுவ காவல் படை, அசாம் ரைஃபிள் படையில் 10% இடம் ஒதுக்கப்படும் என்று நேற்றுகூட மேலும் சலுகைகளை அரசு அறிவித்தது.

அந்­தத் திட்­டத்­திற்கு அனைத்து தரப்­பி­ன­ருமே போதிய அவ­கா­சத்­தைத் தர­வேண்­டும். அதற்­குள்­ளாக வன்­செ­யல்­களில் இறங்கி அர­சாங்­கச் சொத்து­களை அழிப்­பது எந்த விதத்­தி­லும் யாருக்­கும் பலன் தராது என்­பதை இளை­யர்­கள் உண­ர­வேண்­டும்.