அமைச்சர் டோங்: அனைவருக்குமான வலுவான சிங்கப்பூரை பலப்படுத்துவது முக்கியம்
பிரிந்து கிடக்கின்ற, எளிதில் ஊறுபடத்தக்க நிலையில் உள்ள உலகில் பொதுவான பலத்தையும் அடையாளத்தையும் உருவாக்கி எப்படி நிலைநாட்டுவது என்பதே சிங்கப்பூர் எதிர்நோக்கும் மிக முக்கிய கேள்வி என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
இனம், சமயம் இரண்டும் எளிதில் பிரச்சினைகளாக உருவாகக்கூடிய அம்சங்களாக உள்ளன.
மக்களிடையே கருத்து வேறுபாட்டை அதிகப்படுத்தி அவர்களைப் பிளவுபடுத்த விரும்புவோர் செய்யும் காரியங்களுக்கு அவை தோதானவையாக உள்ளன.
அதிகரிக்கும் சமூக ஊடகப் பயன்பாடு போன்ற போக்குகளும் அத்தகைய பிளவுகளை ஊக்குவிக்கும் சக்தியாக இருந்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில் நாம் வெற்றி பெற்று நம் நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான வழி, பொதுவான மனப்போக்கை, பொதுவான எண்ணத்தை, எல்லாரையும் உள்ளடக்கூடிய வலுவான சிங்கப்பூரை உருவாக்குவதுதான். இதைப் பொறுத்தவரை வெறும் பேச்சோடு நின்றுவிடாமல் சிங்கப்பூரில் ஒவ்வொருவருக்கும் இடம் உண்டு என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று திரு டோங் தெரிவித்தார்.
இத்தகைய ஒரு பின்னணியில் கலைகள் பொதுவான, வலுவான ஒரு சக்தியாகத் திகழ்ந்து சிங்கப்பூரின் ஒட்டுமொத்த தனித்தன்மையைப் பலப்படுத்த முடியும் என்று அமைச்சர் கூறினார்.
கலைகள், கலைப்பொருள்கள், மதிப்புமிக்க வரலாற்று அம்சங்கள் ஆகியவற்றின் வழியாகவும் அவற் றில் நமக்குள்ள அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும் ஒருவர் மற்றொருவரை சிறந்த முறையில் புரிந்துகொள்ள முடியும் என்று திரு டோங் குறிப்பிட்டார்.
மலாய் மரபுடைமை அறநிறுவனம் என்ற அமைப்பு ஒரு புதிய தளத்தைத் தொடங்கி இருக்கிறது.
அந்தத் தொடக்க நிகழ்ச்சி தி ஆர்ட்ஸ் ஹவுஸ் கட்டடத்தில் நடந்தது. அதில் அமைச்சர் பேசினார்.
'செம்பாங் இலுமு பிளஸ்' என்ற புதிய இணையத்தளம் போன்ற தளங்கள் பொதுவான புரிந் துணர்வை உருவாக்குவதோடு யோசனைகளை ஆக்ககரமான செயல்களாகவும் மாற்றுகின்றன என்பதை அமைச்சர் சுட்டினார்.
அரசாங்கம், குடிமைச் சமூகம் இதர அமைப்புகள் அல்லது அடித்தள நடவடிக்கைகளில் இளையர்களை ஈடுபடுத்தி அவர்களைச் சேர்ந்து செயல்பட வைத்து அதன்மூலம் இதனை இத்தகைய தளங்கள் செய்கின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்று நடந்த ஆய்வரங்கு பாணியிலான நிகழ்ச்சியில் கலை உலக சமூகத்தைச் சேர்ந்த பலரும் உரையாற்றினார்கள்.
'தியேட்டர் ஈகாமத்ரா' என்ற நாடக கம்பெனியின் நிர்வாக இயக்குநரான ஷாஸா இஷாக், கவிஞரும் புகைப்பட கலைஞருமான மார்க் நாயர், கலைப் போதகர் அமின் ஃபாரித், சுயேட்சை கல்விமான் வோங் சீ மெங் ஆகியோர் உரையாற்றியவர்களில் அடங்குவர்.
சிங்கப்பூரில் கலைகளின் நோக்கம் பற்றியும் அவற்றின் மதிப்பு பற்றியும் டாக்டர் நாயர் உரையாற்றினார்.

