விலை உயர்ந்த மருந்துக்கு மானியம் அளித்தால் செலவு கூடிவிடும்
புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் விலை அதிகமான புதிய மருந்துகளுக்கு பொதுச் சுகாதார நிதி வளம் பயன்படுத்தப்பட்டால் புற்றுநோய் சிகிச்சைக்குச் செலவு அதிகரித்துவிடும் என்றது சுகாதார அமைச்சு.
அதனால் காப்புறுதிச் சந்தாவும் கூடும். பலரை பொறுத்தவரை செலவு கட்டுப்படியாகாத நிலையை எட்டி விடும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு எழுதிய கடிதத்தில் அமைச்சின் நிதிக் கொள்கைத் துறை இயக்குநர் லைடியா லோ குறிப்பிட்டுள்ளார்.
புற்றுநோய் சிகிச்சைக்கான நிதி வளம் தொடர்பிலான மாற்றங்கள் வரும் செப்டம்பரில் இருந்து நடப்புக்கு வர உள்ளன. அந்த மாற்றங்கள் காரணமாக மருந்து நிறுவனங்கள் புற்றுநோய் மருந்துகளின் விலையை சராசரியாக 30% குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பலன் அளிப்பதாகத் தெரியவந்துள்ள, செலவு குறைந்தவை என்று கருதப்படுகின்ற புற்றுநோய் மருந்துகள் பட்டியலை உள்ளடக்கி மெடிஷீல்டு லைஃப், ஐபிஎஸ் காப்புறுதித் திட்டங்கள் செயல்படுமாறு வரம்பு விதிப்பது உள்ளிட்ட பலவும் மாற்றங்களில் அடங்கும்.
கழிவுப்பொருள் கிடங்கில் தீ
பைனியர் பகுதியில் கழிவுப் பொருள்கள் வைக்கப்பட்டு இருந்த கிடங்கு ஒன்றில் நேற்று தீ மூண்டது. மொத்தம் 13 அவசரகால வாகனங்களும் 50 தீயணைப்பாளர்களும் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எண் 23 கல் டிரைவ் முகவரியில் உள்ள அந்தக் கிடங்கில் மூண்ட தீ பற்றி காலை சுமார் 8.25 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
யாருக்கும் காயம் எதுவும் இல்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. தீ மூண்டதற்கான காரணம் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரசாயன கலவை போதைப்பொருள்: அமைப்பு கண்காணிக்கிறது
தென்கிழக்கு ஆசியாவில் புதிய வகை ரசாயனக் கலவை போதைப்பொருள் பரவி வருகிறது. சிங்கப்பூரில் அதைப் பயன்படுத்துவோர் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
'ஹேப்பி வாட்டர்' என்று குறிப்பிடப்படும் அந்தக் கலவை, மாவு வடிவில் பல நிறங்களில் பொட்டலங்களில் கிடைக்கிறது. அதைத் தண்ணீரில் கலந்து பானமாகக் குடிக்கிறார்கள். பல ரசாயனங்கள் கலக்கப்பட்டு அந்தக் கலவை தயாரிக்கப்டுகிறது. அதில் கலந்துள்ள பொருள்களில் பலவும் இங்கு தடை செய்யப்பட்டவை.
இதுபற்றி கேட்டபோது, வட்டார நிலவரத்தை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அதன் பேச்சாளர் கூறினார்.
சிங்கப்பூரில் ஹேப்பி வாட்டர் பாணி இன்னமும் தலைகாட்டியதாகத் தெரியவில்லை என்றார் அவர்.
இருந்தாலும் அண்மையில் இதுபோன்ற சில வகை போதைப்பொருள் கலவையை அந்தப் பிரிவு கைப்பற்றியது.
பிராஸ் பாசாவில் ஹோட்டல் ஒன்றில் கடந்த மே மாதம் 31 வயது ஆடவர் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து $177,000 மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கொரியாவில் இருந்து வந்துள்ள பல சுவை பால் தேநீர் என்று முத்திரை குத்தப்பட்டு இருந்த பொட்டலங்களில் போதைப்பொருள் வைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

