வீவக வீட்டில் கே9 மோப்ப நாய் வளர்ப்பு: முன்னோடித் திட்டம் நிரந்தர திட்டமாகியது

வீவக வீட்டில் கே9 மோப்ப நாய் வளர்ப்பு: முன்னோடித் திட்டம் நிரந்தர திட்டமாகியது

2 mins read
385367af-d7f9-49be-af91-af3aa35bd590
-

பெரிய, கலப்பு இன நாய்­க­ளை­யும் கே9 மோப்ப நாய்­க­ளை­யும் வீடமைப்பு வளர்ச்­சிக் கழக வீட்டு உரி­மை­யா­ளர்­கள் தத்து எடுத்­துக்­கொள்ள அனு­ம­திக்­கும் ஒரு முன்­னோ­டித் திட்­டம் நிரந்­தர திட்­ட­மாக ஆகி இருக்­கிறது.

அந்­தத் திட்­டம் இரண்­டாண்டு காலம் பரி­சோ­தித்­துப் பார்க்­கப்­பட்­டது. அந்­தக் கால­கட்­டத்­தில் அத்­த­கைய 260க்கும் மேற்­பட்ட நாய்­கள் வீவக வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளால் தத்­தெ­டுத்­துக் கொள்­ளப்­பட்­டன.

பரி­சோ­த­னைக் காலத்­தில் 'அடோர்' திட்­டத்­தின்­கீழ் தத்­தெ­டுத்­துக் கொள்­ளப்­பட்ட அனைத்து வகை நாய்­க­ளி­லும் 40 விழுக்­காட்டுக்­கும் அதி­க­மா­னவை இத்­த­கைய நாய்­க­ளாக இருந்­தன.

வீவக வீடு­களில் நடுத்­தர, கலப்பு இன நாய்­களைத் தத்­தெடுத்து வளர்க்க அடோர் திட்­டம் அனு­ம­திக்­கிறது. அத்திட்­டத்­திற்கு விலங்கு கால்­நடை சேவை அமைப்பு தலைமை ஏற்று இருக்­கிறது.

பீஷான், அங் மோ கியோ பூங்­கா­வில் நேற்று 14வது செல்­லப் பிரா­ணி­கள் தினம் கொண்­டா­டப்­பட்­டது. அந்த நிகழ்ச்­சி­யில் அந்த இரண்­டாண்டு முன்­னோ­டித் திட்ட மதிப்­பீட்­டின் ஒரு பகு­தி­யாக இந்த விவ­ரங்­கள் வெளி­யி­டப்­பட்­டன.

செல்­லப் பிரா­ணி­கள் தினம், 2019ஆம் ஆண்டு முதல் ஒவ்­வொரு இரண்டு மாதங்­க­ளுக்­கும் ஒரு முறை நடந்து வரு­கிறது.

அந்த நிகழ்ச்­சி­யில் விலங்கு நல்­வாழ்வு அமைப்­பு­கள், நிபு­ணர்­கள், நிறு­வ­னங்­கள், கால்­ந­டைத் துறை வல்­லு­நர்­கள், செல்­லப் பிராணி விரும்­பி­கள் பல­ரும் ஒன்று சேர்கிறார்­கள்.

தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ் அடோர் திட்­டத்­தின் 10வது ஆண்டு கொண்­டாட்­டத்தை நேற்று தொடங்கி வைத்­தார்.

முன்­னோ­டித் திட்­டம் நடப்­பில் இருந்தபோது பொது­மக்­க­ளி­டம் இருந்து பல தக­வல்­கள் பெறப்­பட்டன. நாய்­கள் குரைக்­கும் சத்­தம், நாய்­களை அவிழ்த்­து­வி­டு­வது ஆகி­ய­வையே பொதுமக்கள் தெரி வித்த புகார்­களில் பெரும்­பா­லா­ன­வை­யாக இருந்தன.

இத்­த­கைய புகார்­க­ளுக்கு எளி­தாக தீர்வு காண முடி­யும் என்றும் பிரச்­சினை எழா­மல் நாய்­க­ளுக்குப் பயிற்சி அளிக்க முடி­யும் என்­றும் அந்த நிகழ்ச்­சி­யில் பேசிய விலங்கு கால்­நடை சேவை அமைப்­பின் விலங்கு நிர்­வாக நிலை­யத்­தின் இடைக்­கால இயக்­கு­ந­ரும் செயல்­திட்ட இயக்­கு­ந­ரு­மான வெய்ன் குய் தெரிவித்தார்.

நாய்­க­ளின் உய­ரத்­திற்கு உள்ள கட்­டுப்­பா­டும் கடை­சி­யில் அகற்­றப்­ப­டுமா என்­ப­தன் தொடர்­பில் வீவ­க­வு­டன் சேர்ந்து பொது­மக்­க­ளின் கருத்­து­கள் மறு­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­படும் என்­றும் அவர் குறிப்பிட்டார்.