ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூரில் மீண்டும் வாகனக் காட்சி நடைபெறவுள்ளது.
அந்நிகழ்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை சன்டெக் சிட்டி மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நடைபெறும்.
நிகழ்ச்சியை மீண்டும் நடத்துவது குறித்து தனது உறுப்பு நிறுவனங்களிடையே இருக்கும் ஆர்வத்தை அறியும் முயற்சியை அதன் ஏற்பாட்டாளர் அமைப்பான 'எம்டிஏ' எனும் சிங்கப்பூர் வாகன வர்த்தகச் சங்கம் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்டது.
வாகனக் காட்சியை மீண்டும் நடத்துவதற்கு வாகனங்களை விற்கும் நிறுவனங்கள் உள்பட தனது உறுப்பு நிறுவனங்கள் ஆதரவு அளித்துள்ளதாக சங்கம் தெரிவித்தது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் நிகழ்ச்சி நடைபெறாமல் போனாலும் அந்தக் காலகட்டத்தில் வாகன நிறுவனங்கள் மின்னிலக்க கண்காட்சிகள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்து வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டன.

