அமைச்சர் சான்: கொள்ளைநோய்ப் பரவல் வாழ்க்கையை சமநிலைப்படுத்தியது

அமைச்சர் சான்: கொள்ளைநோய்ப் பரவல் வாழ்க்கையை சமநிலைப்படுத்தியது

1 mins read
8a650188-99ba-4fd8-8e96-e38ff9e6a7b0
'டாட்ஸ் டே அவு்ட' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் சான் சுன் சிங் (வெள்ளை சட்டை அணிந்திருப்பவர்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வாழ்க்கை ஓடும் வேகத்தை சுமுகமாக்க கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் வாய்ப்பளித்ததாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

வேலை, குடும்ப உறவுகளைச் சீராக்கிக்கொள்ள கொள்ளைநோய்ப் பரவல் உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறை தலைதூக்கியிருப்பது குடும்பத்தார் கூடுதல் நேரம் ஒன்றாகச் செலவிட வகைசெய்துள்ளதாக திரு சான் சொன்னார்.

தந்தையர் தினத்தையொட்டி செந்தோசா தீவின் பலாவான் கிரீன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று (19 ஜூன்) நடைபெற்ற 'டாட்ஸ் டே அவு்ட' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டபோது அமைச்சர் சான் பேசினார்.

கொள்ளைநோய்ப் பரவலால் கடந்த ஈராண்டுகள் சவாலாக இருந்ததைக் குறிப்பிட்ட அவர், வருங்காலத்தில் அதன் தொடர்பில் இன்னமும் தெளிவற்ற சூழல் உருவாகலாம் என்பதைச் சுட்டினார்.

"எனினும், சில அம்சங்களைப் பொருத்தவரை கடந்த ஈராண்டுகள் நமக்கு நன்மை அளித்தன. தேவையான விவகாரங்களில் கவனம் செலுத்தவும் கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டிய அம்சங்களை மீண்டும் தீர்மானித்துக்கொள்ளவும் நம்மால் முடிந்தது," என்று திரு சான் சொன்னார்.

தந்தையர் தினத்திற்காக இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ள 'செலிபிரே்டடிங் ஃபாதர்ஸ்' இயக்கத்தின் ஓர் அங்கமாக நிகழ்ச்சி நடைபெற்றது.