செங்காங் கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட யோசனை
செங்காங்கில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்த்தப்படுவதன் தொடர்பில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினம் பற்றிய கவலையே மிகுந்து இருந்தது.
காம்பஸ்வேலில் உள்ள பன்னோக்கு அரங்கில் நடைபெற்ற கலந்துரையாடலில் கிட்டத்தட்ட 30 குடியிருப்பாளர்கள் கலந்துகொண் டனர்.
செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜேமஸ் லிம், ஹி டிங் ரு, லுவிஸ் சுவா ஆகியோருடன் அவர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
பள்ளிக்கூடங்களில் மனநலம், சமமற்ற செல்வநிலை ஆகியன அவர்கள் பகிர்ந்துகொண்ட இதர அம்சங்கள்.
அவர்களுக்குப் பதிலளித்த துணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம், ஜிஎஸ்டி உயர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சி வாதாடும் என்றார்.
அத்துடன், செல்வ வரி, கரிம வரி ஆகியவற்றை உள்ளடக்கிய வரி விதிப்பு முறைக்கு மாற்று வேண்டும் எனவும் தமது கட்சி கோரிக்கை விடுக்கும் என்றார் அவர்.
தற்போது 7 விழுக்காடாக உள்ள ஜிஎஸ்டி அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 8 விழுக்காடாக உயர்கிறது. தொடர்ந்து, 2024 ஜனவரி 1 முதல் அதனை 9 விழுக்காடாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்திருப்பதைத் தொடர்ந்து அண்மைய மாதங்களாக சிங்கப்பூரிலும் உலகளவிலும் பணவீக்கம் அதிகரித்து உள்ளது.
சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான ஒட்டுமொத்த பணவீக்கம் 5 விழுக்காட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக இம்மாதத் தொடக்கத்தில் பகுப்பாய்வாளர்கள் முன்னுரைத்து இருந்தனர்.
இது, இதற்கு முன்னர் சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்ட 3.6 விழுக்காடு என்பதைவிட அதிகம்.
செங்காங்கில் நேற்று நடத்தப்பட்ட நிகழ்வு, 'செங்காங் கலந்துரையாடல்' என்ற பெயரில் செங்காங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தி வரும் கருத்தரங்கின் தொடர்ச்சி.
நாட்டிலும் தொகுதியிலும் உள்ள பிரச்சினைகள் குறித்து தங்களது கருத்தைப் பொதுமக்கள் தெரிவிக்கவும் கேள்விகளை எழுப்பவும் இந்தக் கருத்தரங்குத் தொடர் நடத்தப்படுவதாக பாட்டாளிக் கட்சி தெரிவித்து உள்ளது.
முதல் மக்கள்கூட்டம் ஜனவரி மாதம் ஸூம் வழியாக நடத்தப்பட்டதாகவும் ஒவ்வொரு காலாண்டிலும் இதனைத் தொடர்ந்து நடத்த தமது குழு எண்ணியுள்ளதாகவும் திருவாட்டி ஹி தெரிவித்தார்.
செலவின உயர்வு குறித்து நேற்று கருத்துத் தெரிவித்த குடியிருப்பாளர் ஒருவர், ஜிஎஸ்டி உயர்வை வெவ்வேறு வகையான பொருள்களின் அடிப்படையில் மேற்கொள்ளலாமா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப இயலுமா என்று நாடாளுமன்ற உறுப்பினர்
களிடம் கேட்டார்.
உதாரணத்திற்கு, ஆடம்பரப் பொருள்களை வாங்குவோருக்கு ஜிஎஸ்டி உயர்வு ஒரு பொருட்டாக இருக்காது என்றும் அவர் கூறினார்.
செங்காங் நகர மன்றத் தலைவருமான திருவாட்டி ஹி கூறுகையில், குடியிருப்பாளரின் கருத்து தமது கருத்தோடு ஒத்து இருப்பதாகக் கூறினார்.
அதாவது, உணவு, சுகாதாரப் பராமரிப்பு போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி உயர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தமது கருத்து என்றும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனைக் கவனத்தில் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

