நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக புதிய வெல்வெட் புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது சிங்கப்பூரின் புலாவ் உபின் தீவில் உள்ள காடுகளில் பன்னெடுங்காலத்துக்கு முன்னர் வாழ்ந்த புழுக்களின் புதிய இனமாக இருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
'ஒனிசோஃபோரா' என்று அழைக்கப்படும் இந்த வகை புழு உயிரினங்கள் டைனோசர் காலத்தைச் சேர்ந்தவை என்று கூறப்
படுகிறது. அதன் அடிப்படையில், சிங்கப்பூர் தோன்றுவதற்கு முன் பல மில்லியன் ஆண்டு வரலாற்றைக் கொண்டதாக இந்தத் தீவின் புவிவியல் அமைப்பு இருந்திருக்குமோ என்ற கேள்வி இதன்மூலம் எழுந்துள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான பார்கி சர்மா, முதன்மை ஆய்வாளர்களில் ஒருவர்.
அவர் கூறுகையில், "மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வைத் தொடங்கியபோது சிங்கப்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட வெல்வெட் புழுக்கள் தற்போது இங்கு காணப்
படுவதாக அறிந்தோம்.
"எனவே, அவற்றை எங்களது ஆய்வுக்குப் பயன்படுத்த முடிவு செய்தோம்," என்றார்.
அந்த வகைப் புழுக்களின் கோழையில் புரதச்சத்து அடங்கியுள்ளதை அறிவது தொடர்பான ஆய்வை அவர் குறிப்பிட்டார். இந்த ஆய்வறிக்கை நவீன விஞ்ஞானம் என்னும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.
"சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்டது இந்த வெல்வெட் புழு என்று சொல்லப்பட்டாலும் வெகு காலத்திற்கு முன்பு தாய்லாந்தில் இருந்து அது இங்கு வந்திருக்கலாம் என்று கருதுகிறோம்," என்றார் திருவாட்டி பார்கி தெரிவித்தார்.
இருப்பினும் இதர புழு இனங்
களிலிருந்து இது மாறுபட்டு இருப்பது ஆய்வுக் குழுவினரின் கவனத்துக்கு வந்தது. சிங்கப்பூர் வெல்வெட் புழுவில் குறிப்பிடத்தக்க மரபணு மாற்றங்கள் இருப்பதாக டாக்டர் யாங் லு கூறினார்.
ஆனாலும் இது புதிய வகை உயிரினம் என்பதில் குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மேலும், இது தொடர்பான மாதிரிகள் ஜெர்மனியிலுள்ள பகுப்பாய்வாளர்கள் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புதிய வகை உயிரினம் என இது உறுதியாகத் தெரியவந்தால், அதன் பெயருடன் சிங்கபுராவை இணைக்க குழு எண்ணுகிறது.