சிங்கப்பூரில் அடுத்த சில மாதங்களுக்கு மழை கொட்டும் என எதிர்ப்பார்க்கலாம். இரண்டு இயற்கை நிகழ்வுகள் இந்த வட்டாரத்தில் அதிக மழையைக் கொண்டுவரும் எனக் கூறப்பட்டது.
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள லா நீனா எனும் நிகழ்வு உலகின் வெப்பநிலையைப் பாதித்துள்ளது. சில இடங்களில் வெள்ளத்தையும், சில பகுதிகளில் வறட்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு 2030 வரை தொடரும் எனக் கூறப்பட்டது.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் பெய்த கனத்த மழைக்கு லா நீனா நிகழ்வே காரணம் என வானிலை மையம் தெரிவித்தது.
இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள மற்றொரு வானிலை நிகழ்வு மழை மேகங்களை இந்த வட்டாரத்துக்குக் கொண்டுவரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ள வெப்பநிலையைத் தணிக்க மழை உதவும் என எதிர்பார்க்கலாம். பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியசிலிருந்து 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

