கொவிட்-19 பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்களுக்கு கிருமித் தொற்றிலிருந்து கடும் பாதிப்பு ஏற்படுவதும் தொற்றினால் உயிரிழப்பதும் மூன்று மடங்கு குறைவு என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
மூன்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் ஆயிரம் வாய்ப்புகளில் மூன்று என்றும், இந்த வாய்ப்பு இரண்டு தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்களுக்கிடையே ஆயிரத்தில் பத்து என்றும் கூறப்பட்டது.
அடுத்த கொவிட்-19 அலைக்கு முன், கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அதைப் போட்டுக்கொள்ளுமாறு அமைச்சர் கேட்டுகொண்டார்.
அறுபது வயதுக்கு மேற்பட்ட 80,000 பேர் கூடுதல் தடுப்பூசியை இன்னும் போட்டுக்கொள்ளவில்லை என அமைச்சர் தெரிவித்தார். தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பும் மூத்தோர் ஏதெனும் தடுப்பூசி நிலையத்துக்கு சென்று அவ்வாறு செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டது.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் 77 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதாவது 4.2 மில்லியன் பேர்.
அடுத்த ஓரிரு மாதங்களில் சிங்கப்பூரில் அடுத்த கொவிட்-19 அலை ஏற்படும் சாத்தியம் இருப்பதாக அமைச்சர் கூறினார். தடுப்பூசி போட்டுக்கொண்டால் அனைவரும் பாதுகாப்பாக இருக்கலாம் என அவர் சொன்னர்.

