அறிவுத்திறன் குன்றியோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புதிய திட்டத்தின்கீழ் பத்துப் பேர் நேற்று வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். துப்புரவாளர், தோட்டப் பராமரிப்பாளர் போன்ற வேலைகளில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.
வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றமும் 'மைண்ட்ஸ்' எனப்படும் அறிவுத்திறன் குன்றியோருக்கான சிங்கப்பூர் இயக்கமும் இணைந்து சமுதாய வேலைவாய்ப்புத் திட்டம் எனும் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
அறிவுத்திறன் குன்றியோரும் வேலைவாய்ப்பு பெறவும் சமூகத்திற்குப் பங்களிக்கவும் உதவும் முயற்சிகளின் ஓர் அங்கம் இந்தப் புதிய திட்டம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறினார்.
சமுதாய வேலைவாய்ப்புத் திட்டத்தில் கூடுதலான சமூகசேவை அமைப்புகளையும் நிறுவனங்களையும் பங்காளிகளாக இணைக்க முயற்சி எடுக்கப்படுகிறது.
முதலில் வேலைவாய்ப்பு பெற்ற பத்து பேரும் இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து தெம்பனிஸ் சங்காட் சமூகத் தோட்டத்திலும் தெம்பனிஸ் வெஸ்ட் சமூக மன்றத்திலும் பணிபுரிகின்றனர். 'மைண்ட்ஸ்' அமைப்பு அவர்களைத் தனிப் பேருந்தில் வேலையிடத்துக்குக் கூட்டிச்சென்று திரும்ப அழைத்து வருகிறது.
வேலைவாய்ப்பு பெற்ற பத்து பேரில் ஒருவர் 30 வயதாகும் சரவணன் குமாரசாமி. இவர் தெம்பனிஸ் வெஸ்ட் சமூக மன்றத்தில் துப்புரவாளராகச் சேர்ந்துள்ளார்.
சகோதரியும் இவரது பராமரிப்பாளருமான செல்வராணி குமாரசாமி, தனது சகோதரருக்கு இத்தகைய வேலைவாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
"அவர் இந்த வேலையை மிகவும் விரும்பிச் செய்கிறார்; ஒவ்வொரு நாளும் தனது வேலையைப் பற்றி என்னிடம் பகிர்ந்துகொள்கிறார்," என்றார் அவர். சரவணனின் சம்பளமும் வேலை தொடர்பான இதர வருவாயும் அவரது பாதுகாப்புக்கு மட்டுமின்றி குடும்பச் செலவுகளுக்கும் கைகொடுக்கும் என்றார் செல்வராணி.
சரவணன் உள்ளிட்ட பத்து பேரும் ஏற்கெனவே 'மைண்ட்ஸ்' அமைப்பில் இதேபோன்ற வேலைக்குப் பயிற்சி பெற்றவர்கள். அதன் வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிலையத்தில் இவர்கள் நல்லமுறையில் பணியாற்றியதால் இந்த முன்னோடித் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இவர்கள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் வேலைசெய்வர். மாதம் 500 வெள்ளி முதல் 600 வெள்ளி வரை இவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும்.
துப்புரவாளர், தோட்டப் பராமரிப்பாளர் பணிகள் ஏன் இத்தகையோருக்குத் தெரிவுசெய்யப்பட்டன என்ற கேள்விக்கு வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ பதிலளித்தார். தோட்ட வேலை தொடு உணர்வுடன் தொடர்புடையது என்பதைக் குறிப்பிட்ட அவர், அறிவுத்திறன் குன்றியோருக்கு இது ஒரு சிகிச்சையைப் போன்றது என்று விளக்கினார்.
திட்டம் பங்கேற்போரின் தன்னம்பிக்கையையும் வேலைத்திறனையும் வளர்க்க உதவும் என்றார் அமைச்சர் மசகோஸ்.

