சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் சென்ற ஏப்ரல் 1ஆம் தேதி நிலப் போக்குவரத்துக்கான எல்லைகள் திறக்கப்பட்ட பிறகு, அன்றாடம் சராசரியாக 165,000க்கும் அதிகமானோர் பயணம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி, நேற்று மாநில சட்டமன்றக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ சென்னின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
துவாஸ், உட்லண்ட்ஸ் என இரு சோதனைச்சாவடிகளிலும் அதிகரித்துள்ள போக்குவரத்தைச் சமாளிக்க உரிய ஏற்பாடுகளில் கவனம் செலுத்தப்படுவதாக முதல்வர் ஓன் குறிப்பிட்டார்.
குடிநுழைவு, சுங்கச் சாவடிகளில் நெரிசலைத் தவிர்க்கவும், சேவையை மேம்படுத்தவும் மலேசியாவின் மத்திய அரசுடன் இணைந்து ஜோகூர் மாநில அரசு முயற்சி மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

