செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ea03631c-172a-4b64-ad24-fc6922fc1e58
-

வல்லுநர்கள்: டெங்கி எதிர்ப்பில் தடுப்பு மருந்துகள் தேவைப்படலாம்

மலேரியா நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதைப் போன்றே டெங்கிப் பரவலையும் அவை கட்டுப்படுத்தும் என்கின்றனர் வல்லுநர்கள்.

டெங்கி பரவும் அபாயம் அதிகமுள்ள பெரிய இடங்களைத் தரவு அறிவியல் மூலம் அடையாளம் கண்டு அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும் என்று இவர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே டெங்கியால் பாதிக்கப்பட்ட 12 முதல் 45 வயது வரையினருக்கு 'டெங்வேக்சியா' எனும் தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம். 65ம் அதற்கு மேலும் வயதானவர்களுக்கோ இதற்கு முன் டெங்கியால் பாதிக்கப்படாதோருக்கோ இந்த மருந்தைப் பயன்படுத்த இயலாது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் 24 வாரங்களில் 15,000க்கும் அதிகமான டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின. வழக்கமாக ஜூன் முதல் அக்டோபர் வரையில் இங்கு டெங்கிப் பரவல் அதிகரிக்கும்.

ஈராண்டில் உடற்குறையுள்ளோருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு

வீட்டிலிருந்து வேலைசெய்யும் நடைமுறையால் கடந்த ஈராண்டில் உடற்குறையுள்ளோரில் அதிகமானோருக்கு வேலை கிடைத்ததுடன் தளவாடத்துறை, சுகாதாரப் பராமரிப்புத் துறை போன்றவற்றில் இவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட்கும் திறன் குறைந்தோருக்கு இந்த நடைமுறை நன்மையளித்தாலும் பார்வைக் குறைபாடு உள்ளோரை வேலைக்கு எடுப்பதில் முதலாளிகள் இன்னும் தயக்கம் காட்டும் நிலை இருப்பதாகக் கூறப்பட்டது.

கடந்த ஈராண்டில் 15 முதல் 64 வயது வரையிலான உடற்குறையுள்ளோருக்கான வேலைவாய்ப்பு 28 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காட்டுக்கு உயர்ந்ததாக 'எஸ்ஜி எனேபல்' அமைப்பு கூறியது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கூடுதலான நிறுவனங்கள் இத்தகையோரை வேலைக்கு அமர்த்த முன்வரும் என்று எதிர்பார்ப்பதாக அமைப்பு குறிப்பிட்டது.