இரு வேறு சம்பவங்களில் பெண்களைக் கொலை செய்யப்போவதாக மிரட்டல் குறுஞ்செய்தி அனுப்பிய ஆடவருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனையுடன் 4,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
பாதுகாப்பு அலுவலரான 53 வயதாகும் பெரியசாமி கண்ணன் தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். மது அருந்திவிட்டுப் பிறருக்குத் தொந்தரவு தந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.
முதல் சம்பவத்தில் அவர் பணிபுரிந்த கட்டடத்தில் பொருள் விநியோகம் செய்யவந்த 20 வயதுப் பெண்ணின் கைத்தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு பின்னர் அவருடன் பாலியல் உறவுகொள்ள அழைப்புவிடுத்தார். அந்தப் பெண் மறுக்கவே கொலை மிரட்டல் விடுத்தார் பெரியசாமி.
சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் தட்டிக்கேட்க வந்த பெண்ணின் காதலரை பெரியசாமி அடித்துத் துரத்தியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து பெண்ணின் காதலர் காவல்துறையில் புகாரளித்தார்.
இதையடுத்து சென்ற அக்டோபரில் நடந்த மற்றொரு சம்பவத்தில், மது அருந்திவிட்டு குடியிருப்புக் கட்டடமொன்றில் வேலைக்குச் சென்றார். குடியிருப்பாளர்களின் புகாரையடுத்து பெரியசாமி மது அருந்தியிருந்தது குறித்து விசாரித்த குடியிருப்பு மேலாளருக்கு வேலை நேரம் முடிந்த பிறகு, தான் ஒரு பெண்ணைக் கொல்லப்போவதாகக் குறுஞ்செய்தி அனுப்பினார்.
அத்துடன் அருகில் உள்ள புல்தரையில் தனது சீருடையைத் தீயிட்டுக் கொளுத்தி அந்தப் புகைப்படத்தை மேலாளருக்கு அனுப்பிவைத்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து குடியிருப்பு மேலாளர் பெரியசாமி குறித்துக் காவல்துறையிடம் புகாரளித்தார்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் குடியிருப்புக் கட்டடத்திற்குச் சேதம் ஏதுமில்லை என்றும் கூறப்பட்டது.

