கிளார்க் கீ வட்டாரத்தில் இடம்பெற்ற சட்டவிரோதமான புத்தாண்டு தின ஒன்றுகூடலில் தெரிந்தே கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகளை மீறியதை 20 வயதாகும் லீ ஹெர்ன் சிங் நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
கோட்ரா வெங்கட சாய் ரோஹன்கிருஷ்ணாவின் 'யூடியூப்' ஒளிவழிக்காக அவர் 'ஸ்பைடர் மேன்' வேடத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடுவதைக் காணொளியில் பதிவுசெய்யச் சென்றதாக லீ ஒப்புக்கொண்டார்.
சம்பவத்தன்று கோட்ரா 'ஸ்பைடர் மேன்' உடையிலும் மற்றோர் இளையரான கிளேக்ஸி லோ சுவான் மிங் குத்துச்சண்டை வீரரைப் போன்ற முகமூடியுடனும் அங்கு சென்றிருந்தனர்.
கோட்ரா தனது 'யூடியூப்' ஒளிவழிக்குப் பொதுமக்களை நேர்காணல் செய்யும் யோசனையைச் சொன்னபோது லீ, லோ இருவரும் அதற்கு உதவ ஒப்புக்கொண்டனர்.
கோட்ராவும் லோவும் பொதுமக்களிடம் நேர்காணல் செய்தபோது லீ இருவரையும் படமெடுத்தார்.
முன்னதாக இம்மாதம் 10ஆம் தேதி, இந்த நேர்காணலில் பங்குபெற்ற 22 வயது அஸிக்கி சுரானிக்கு நீதிமன்றம் 1,700 வெள்ளி அபராதம் விதித்தது.
19 வயதாகும் கோட்ரா, லோ இருவருக்கும் ஏற்கெனவே முறையே 4,000 வெள்ளியும் 2,000 வெள்ளியும் அபராதம் விதிக்கப்பட்டது.
லீ நன்னடத்தைக் கண்காணிப்புக்குத் தகுதியானவரா என்பது தொடர்பான அறிக்கைக்கு நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி லீக்கு தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

