ஜிஎஸ்டி எனப்படும் பொருள், சேவை வரி திட்டமிட்டபடி உயரும் என துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், உயரும் பணவீக்கம் ஏற்கெனவே மக்களுக்கு அக்கறைக்குரிய அம்சங்களாக இருக்கின்றன. இந்நிலையில் ஜிஎஸ்டி உயர்வும் மக்களுக்கு கவலையளிக்கும் என தாம் அறிந்திருப்பதாக திரு வோங் கூறினார். ஆனால், ஜிஎஸ்டி உயர்வு தேவையான ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
இந்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில், ஜிஎஸ்டி உயர்வு இரண்டு கட்டங்களாக உயரும் என திரு வோங் தெரிவித்திருந்தார். முதல் கட்டமாக அடுத்தாண்டு ஜனவரியில் ஜிஎஸ்டி ஏழு விழுக்காட்டிலிருந்து எட்டு விழுக்காடு அதிகரிக்கும். இரண்டாம் கட்டமாக 2024ல் அது எட்டு விழுக்காட்டிலிருந்து ஒன்பது விழுக்காடு கூடும்.
மூப்படையும் சமூகம், சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் ஆகியவை உயர்ந்துகொண்டு வருவதால், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல வரிகளை உயர்த்த வேண்டியுள்ளது என்று அமைச்சர் சொன்னார்.
இந்த உயர்வைச் சமாளிக்க அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் உதவி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதன் மூலம் குறைந்தது அடுத்த பத்தாண்டுகளுக்கு பெரும்பாலான சிங்கப்பூரர்களை ஜிஎஸ்டி உயர்வு பாதிக்காது என அமைச்சர் உறுதியளித்தார்.

