சக ஊழியரை கத்தியால் குத்திய வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

சக ஊழியரை கத்தியால் குத்திய வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

1 mins read
096b0395-31b4-4f1e-91ba-59f85e4f5603
சிடிபிஎல் துவாஸ் தங்குவிடுதியில் இந்தாண்டு ஜனவரி 12ஆம் தேதி சம்பவம் நடந்தது (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

இரண்டு வெளிநாட்டு ஊழியர்களிடையே விளையாட்டாக ஆரம்பித்த அடிதடி வினையாக முடிந்தது. ஒருவருக்கு வயிற்றில் கத்திக் குத்து காயம். அதை ஏற்படுத்திய மற்றொருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரே அறையில் தங்கி, தன்னோடு சேர்ந்து பணியாற்றிய ஆடவரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக பங்ளாதேக்ஷ் நாட்டை சேர்ந்த ஹோசன் முகமது மிடுலுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தாண்டு தொடக்கத்தில் இருவரும் தங்கியிருந்த சிடிபிஎல் துவாஸ் தங்குவிடுதியில் இச்சம்பவம் நடந்தது. 24 வயதான இருவரும் தங்கள் அறையில் அடித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர். விளையாட்டு கைகலப்புக்கு இட்டுச்சென்றது. அவ்விருவரையும் அறையில் இருந்த மற்றவர்கள் பிரிக்க நேரிட்டது.

கோபம் தணியாத ஹோசன் பாதிக்கப்பட்டவரை பழிவாங்க திட்டமிட்டார். அன்று இரவே தூங்கிக்கொண்டிருந்தவரை கத்தியால் வயிற்றின் இடதுபுறத்தில் குத்தியுள்ளார். வலியில் விழித்துகொண்டவர் காவல் துறையை உதவிக்கு அழைத்துள்ளார். காயமடைந்தவருக்கு சிறுகுடலில் கத்திக் கீறு ஏற்பட்டு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.

வேண்டுமென்றே மற்றவரை காயப்படுத்தும் குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனையாக ஏழு ஆண்டு சிறை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.