காம்கேர் ரொக்க உதவித் தொகை ஆகஸ்ட் 1 முதல் அதிகரிக்கப்படும். நிரந்தர மேம்பாடு செய்யப்பட்ட குறுகிய காலம் முதல் நடுத்தர காலம் வரையிலான உதவித் திட்டங்களுக்கும் நீண்டகால உதவித் திட்டங்களுக்கும் இது பொருந்தும்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று அறிவித்த ஆதரவுத் திட்டங்களின் ஒரு பகுதியான இது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச் சின் நடவடிக்கை. அதிகரிக்கும் உலகளவிலான பணவீக்கத்தால் எழுந்துள்ள பொருளியல் சவால்களைச் சமாளிக்க குடும்பங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் உதவும்பொருட்டு காம்கேர் உதவித் தொகை அதிகரிக்கப்படுகிறது.
காம்கேர் நீண்டகால உதவித் திட்டத்தில் பங்குபெறும் ஒருவரை மட்டும் கொண்ட குடும்பம் ஆக அதிகமாக மாதத்திற்கு $649 ரொக்க உதவி பெறும்.
தற்போது அந்தத் தொகை $600 ஆக உள்ளது. இருவரைக் கொண்ட குடும்பம் தற்போது பெற்றுவரும் $1,000 ரொக்க உதவி $1,080க்கு அதிகரிக்கப்படும்.
அதேபோல மூவரை உள்ளடக்கிய குடும்பம் மாதத்திற்கு $1,510 உதவித் தொகை பெறும். தற்போது அந்தத் தொகை $1,400 ஆக உள்ளது. நால்வரைக் கொண்ட குடும்பம் பெற்றுவரும் $1,750 உதவித்தொகை $1,930க்கு உயர்த்தப்படும்.
இவ்வாறு உதவித்தொகை அதிகரிக்கப்படுவதன் மூலம், காம்கேர் நீண்டகால உதவித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள 4,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர் குடும்பங்கள் பலனடையும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் குடும்பங்களில் பெரும்பாலானவை, ஓரளவு வருமானம் அல்லது வருமானமோ குடும்ப ஆதரவோ இல்லாத மூத்தோரைக் கொண்டது. பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் அளிக்கப்படும் மருத்துவப் பராமரிப்பு, சமூக சேவைகள் மற்றும் சமூக ஆதரவை உள்ளடக்கிய ஆதரவுத் தொகுப்பின் ஒரு பகுதி இந்த ரொக்க உதவி.
குறுகிய காலம் முதல் நடுத்தர காலம் வரையிலான காம்கேர் உதவிக்கு விண்ணப்பம் செய்வோரும் தற்போது பெற்று வரும் உதவியை புதுப்பிப்போரும் அதிக ரொக்க உதவியையும் பயனீட்டுச் செலவு ஆதரவையும் பெறுவர்.
குடும்பத்தில் உள்ளோர், தேவை மற்றும் வருமானம் ஆகியவற்றைப் பொறுத்து உதவித்தொகை மாறும்.
நீண்டகால காம்கேர் உதவியைப் பெறுவோருக்கும் குறுகிய காலம் முதல் நடுத்தர காலம் வரையிலான உதவிக்கு விண்ணப்பப்பம் செய்வோர் மற்றும் புதுப்பிப்போருக்கும் ஆகஸ்ட் 1 முதல் தானாகவே தொகை அதிகரிப்பு செய்யப்படும்.
உக்ரேன் போர், உலக விநியோகத் தொடரில் ஏற்பட்ட இடையூறு ஆகியவற்றால் உயரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட தற்காலிக உதவி நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவற்றில் மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தற்காலிக நடவடிக்கைகள் செப்டம்பர் 30 வரை நடப்பில் இருக்கும். காம்கேர் உதவித் திட்ட மேம்பாடு தவிர, ஜிஎஸ்டி ரொக்கப் பற்றுச்சீட்டை பெறுவோர் ஆகஸ்ட் மாதம் $300 வரை கூடுதல் வழங்கு தொகை பெறுவர். இதன் மூலம் 1.5 மில்லியன் சிங்கப்பூரர்கள் பலனடைவர்.

