மின்சாரப் பயன்பாட்டுச் செலவுகள் உயர்ந்து வரும் நிலையில், சில துறைகளைச் சேர்ந்த உள்ளூர் நிறுவனங்கள் தங்களது எரிசக்திச் செலவுகளைக் குறைப்பதில் உதவி பெற புதிய மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக 'எரிசக்தி சிக்கன மானியம்' என்னும் புதிய திட்டத்தை நிதி அமைச்சு நேற்று அறிவித்தது.
உணவு சேவைகள், உணவு தயாரிப்பு மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளைச் சேர்ந்த சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எரிசக்தி சிக்கன சாதனங்களைப் பொருத்திக்கொள்ள 70 விழுக்காடு வரையிலான நிதி ஆதரவைப் பெற இந்த மானியம் கைகொடுக்கும்.
ஒவ்வொரு நிறுவனமும் அதிகபட்சம் $30,000 வரை மானிய உதவி பெறலாம். எல்இடி விளக்கு, குளிரூட்டி, சமையலறை புகைபோக்கி, குளிர்சாதனப் பெட்டி, நீர் சூடேற்றி மற்றும் உலர்த்தி போன்ற அங்கீகரிக்கப்பட்ட எரிசக்தி சிக்கன சாதனங்களை வாங்க அந்நிறுவனங்களுக்கு இத்தொகை உதவும்.
அதிக மின்சாரப் பயன்பாட்டுச் செலவுகளால் ஒட்டுமொத்த வர்த்தகச் செலவுகளில் தாக்கம் ஏற்பட்டு, கணிசமான பாதிப்புக்கு ஆளான நிறுவனங்கள் இந்தப் புதிய மானியத்திற்குத் தகுதிபெறும் என்று நிதி அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"எரிசக்திச் சிக்கனத்தை மேம்படுத்துவதன் மூலம் வர்த்தகச் செலவுகளைக் குறைக்க இதுபோன்ற நிறுவனங்களுக்கு மானியம் உதவும்," என்றது அமைச்சு.
"கட்டு மீறிச் செல்லும் எரிசக்திச் செலவுகளை நிர்வகிக்க நமது வர்த்தகங்களுக்கு உதவும்பொருட்டு நீண்டகாலம் நீடிக்கக்கூடிய அம்சம் இந்த மானியத் திட்டம்," என்றும் அது குறிப்பிட்டது.
உருமாற்ற முயற்சிகளை நீண்டகாலத்திற்குத் தொடர நிறுவனங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் உதவிகளை அரசாங்கம் செய்யும் என்று உதவித் திட்டங்களை அறிவிக்கையில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
புதிய மானியத்திற்கு விண்ணப்பம் செய்யும் நிறுவனங்கள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதோடு, வாங்கப்படும் எரிசக்தி சிக்கன சாதனங்களை இங்கு பயன்படுத்த வேண்டும்.
தகுதிபெறும் நிறுவனங்கள் புதிய மானியத்திற்கு செப்டம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது முதல் ஓராண்டுக்குள் சாதனங்களை வாங்குவதோடு, வாங்கிய தொகைக்கான உதவிபெற விண்ணப்பிக்க வேண்டும். உதவி நாடும் கோரல்களை 2024 மார்ச் 31 வரை சமர்ப்பிக்கலாம்.எரிசக்திச் சிக்கன நடவடிக்கையைக் கடைப்பிடிக்க இங்குள்ள நிறுவனங்களுக்கு ஏற்கெனவே செய்யப்பட்டு வரும் உதவிக்கு மேலாக புதிய மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தித் துறை நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும், தேசிய சுற்றுப்புற வாரியத்தின் எரிசக்தி சிக்கன நிதி, தற்போதைய 2.0 கட்டடங்களுக்கு உதவும், கட்டட, கட்டுமான ஆணையத்தின் பச்சை முத்திரை ஊக்கத்தொகைத் திட்டம் போன்றவை நடப்பிலுள்ளவை. நிதி, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் இதனை விவரித்தார்.

