தடையால் பாதிக்கப்பட்ட கோழி அறுப்பு நிலையங்களுக்கு உதவி
மலேசிய இறக்குமதித் தடையால் பாதிக்கப்படும் கோழி அறுப்பு நிலையங்கள் ஒரு மாத வெளிநாட்டு ஊழியர் தீர்வைக் கழிவு பெறும். துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்த உதவித் தொகுப்பில் இதுவும் அடங்கும். சிங்கப்பூரில் 11 கோழி அறுப்பு நிலையங்கள் உள்ளன. கோழி ஏற்றுமதித் தடையால் இவற்றில் சில நிலையங்கள் தற்காலிகமாகப் பணியை நிறுத்தவேண்டி இருந்தது. மேலும் சில நிலையங்கள் தங்களது ஊழியர்களை விடுப்பு எடுத்துக்கொள்ளக் கூறின. மலேசியாவில் கோழிகளுக்கு ஏற்பட்டுள்ளத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் பொருட்டு, ஜூன் 1 முதல் கோழி ஏற்றுமதிக்கு அந்நாடு தடை விதித்தது. சிங்கப்பூருக்கு விநியோகிக்கப்படும் மொத்த கோழிகளில் 34 விழுக்காடு மலேசியாவில் இருந்து வருபவை என சிங்கப்பூர் உணவு அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகளில் பெரும்பாலானவை உயிருடன் தருவிக்கப்பட்டு இங்கு வெட்டப்பட்டு விற்கப்படுவது வழக்கம்.
கம்போங் கோழி எனப்படும் நாட்டுக்கோழிகளையும் கறுப்புக் கோழிகளையும் ஏற்றுமதி செய்வதற்கான தடையைக் கடந்த வாரம் நீக்கிய மலேசியா, சிங்கப்பூரில் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழி களுக்கான தடை நீடிக்கும் என்று தெரிவித்தது. இந்தத் தடையால் இங்குள்ள கோழி அறுப்பு நிலைய ஊழியர் களின் வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தெரிவித்தார்.
நிதிக் கையிருப்பு தேவைப்படாது
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள $1.5 பில்லியன் ஆதரவு தொகுப்புத் திட்டத்திற்குத் தேவைப்படும் நிதியை அரசாங்க நிதிக் கையிருப்பில் இருந்து எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். அதற்குப் பதில் நடப்பில் உள்ள அர சாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் மூலம் இதற்கு நிதி வழங்கப்படும் என்றும் அவர் நேற்று கூறினார்.
எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் வலுவான பொருளி யல் மீட்சி காரணமாக 2021 நிதி ஆண்டில் அதிகமான வருவாய் வசூலான தாகக் குறிப்பிட்ட அவர், விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க வர்த்தகர்களுக்கும் சிங்கப்பூரர் களுக்கும் உதவிக்கரம் நீட்டும் வகையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு இந்த வருவாய் பயன்படும் என்றார். அதேநேரம் கொவிட்-19 கொள்ளைநோயைச் சமாளிக்க ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு பகுதி இதற்கு எடுக்கப்படும் என்றும் திரு வோங் சொன்னார். ஓமிக்ரான் தொற்று எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் முன்கூட்டியே வீரியம் இழந்ததால் அதற்காக ஒதுக்கப்பட்ட செலவுத் தொகை புதிய ஆதரவுத் தொகுப்புக்கு உதவும் என்றார் அவர்.
"இந்தக் காரணங்க ளால் கூடுதல் வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அதிக நிதி தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்படும்," என்றார் திரு வோங்.
சவால்களைச் சமாளிக்க பொருளியல் சீர்திருத்தம் தொடருவது அவசியம்
பணவீக்கம் மட்டுமே சிங்கப்பூர் இப்போது எதிர்கொண்டு
வரும் சவாலன்று என்றும் இந்தப் பரந்த உலகில், கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள பொருளியல் சீர்திருத்தம் தொடர வேண்டியது அவசியம் என்றும் துணைப்
பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
பருவநிலை மாற்றம், அதிகரித்துவரும் புவிசார் அரசியல் பதற்றநிலைகள், அமெரிக்கா-சீனா இடையிலான உத்திபூர்வப் போட்டியால் மேலும் பிளவுபடும் உலகளாவிய அமைப்பு ஆகியவையும் அவற்றில் அடங்கும்.
உள்ளூர் அளவில், மூப்படையும் மக்கள்தொகை போன்ற சவால்களையும் சிங்கப்பூர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக அரசாங்கம் அதிகம் செலவிட
வேண்டியிருக்கும்.
"நிலையில்லாத, முன்னில்லாததைவிட அபாயமிக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் புதிய உலகிற்கு ஏற்றபடி, அடிப்படையில் நம்மை நாமே மறுசீரமைக்க வேண்டியுள்ளது," என்றார் திரு வோங்.
அதனால்தான் பொருளியல் சீர்திருத்தங்களை சிங்கப்பூர் முடுக்கிவிட வேண்டியுள்ளது என்றும் அவர் சொன்னார்.
"விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவினங்கள் போன்ற இப்போதைய பிரச்சினைகள் குறித்து சிங்கப்பூரர்கள் பலரும் கவலைப்படுவதை அறிந்துள்ளேன். அவை, நமது செயல்பாட்டுச் சூழலில் பெரும் கட்டமைப்பு மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வதையும் பற்றியது," என்றும் அமைச்சர் வோங் கூறினார்.

