அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய பயணிகள், இணையத்தில் வெற்றிகரமாக மேல்முறையீடு செய்தால் தங்கள் புதிய கடவுச்சீட்டுகளை சில நாள்களில் பெறலாம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) அதன் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஐசிஏ இணையப் பக்கத்தில் இந்தத் தகவல் இந்த மாதத் தொடக்கத்தில் புதுப்பிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. அவசர கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்திற்குள் அல்லது பயணத் தேதிக்கு குறைந்தது இரு நாள்களுக்கு முன்பு ஐசிஏ பதில் அளிக்கும் என்று இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையத்தில் மேல்முறையீடு செய்வோர் விமானப் பயணச்சீட்டுகள், பயண விவரம் அல்லது ஹோட்டல் முன்பதிவுகள் போன்ற ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேல்முறையீடு வெற்றிகரமாக அமைந்தால் ஐசிஏ கட்டடத்திலோ 27 அஞ்சல் அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றிலோ கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
புதிய கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள பயணிகள் குறைந்தது ஆறு வாரங்கள் காத்து இருக்க நேரிடும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஒவ்வொரு நாளும் ஐசிஏ 5,000க்கும் அதிகமான கடவுச்சீட்டுகளை வழங்கி வருகிறது. 2019ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையைவிட இது கிட்டத்தட்ட மூன்று மடங்காகும்.

