டெங்கி, ஸிக்கா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களுக்கு எதிரான சிகிச்சை முறையைத் தயாரிப்பதன் மூலம் அந்நோய்களை எதிர்கொள்ள புதிய ஆய்வு நிலையம் ஒன்று உதவும்.
டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளிக்கும் ஜான்சன் & ஜான்சன் மருந்துத் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலான பங்காளித்துவ முயற்சியில் 'ஜே&ஜே செட்டலைட் சென்டர் ஃபார் குளோபல் ஹெல்த் டிஸ்கவரி' எனும் ஆய்வு நிலையம் நேற்று தொடங்கப்பட்டது.
'ஃபிளேவிவைரஸ்' எனும் கிருமியால் ஏற்படும் நோய்களில் அது கவனம் செலுத்தும். அத்தகைய நோய்களுக்கு தற்போது குறிப்பிட்ட சிகிச்சைகள் கிடையாது என்று டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது. மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களையும் ஏற்படுத்தும் 'ஃபிளேவி' கிருமி, ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 400 மில்லியன் பேரைத் தொற்றுவதாக டியுக்-என்யுஎஸ் குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் இவ்வாண்டு இதுவரை 15,800க்கும் அதிகமானோரிடம் டெங்கிப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் தகவல் தெரிவிக்கிறது. ஒப்புநோக்க, கடந்த ஆண்டு முழுவதும் 5,258 பேரிடம் டெங்கி கண்டறியப்பட்டிருந்தது.
இத்தகைய நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்த ஆய்வு நிலையம் சிறந்து விளங்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாக டியுக்-என்யுஎஸ் பள்ளியில் புத்தாக்கம், தொழில்முனைவு துறையின் துணைத் தலைவரான இணைப் பேராசிரியர் கிறிஸ்தஃபர் லாயிங் கூறினார்.
டெங்கியைத் தடுப்பதிலும் அதைக் குணப்படுத்துவதிலும் மருத்துவப் பரிசோதனை ஒன்றை நடத்த சிங்ஹெல்த் குழுமத்தின் 'இன்வெஸ்டிகேஷனல் மெடிசன்' பிரிவுடன் டியுக்-என்யுஎஸ் பள்ளி அண்மையில் பணியாற்றியது.
டெங்கித் தடுப்பு மருந்து தற்போது இரண்டாம் கட்டப் பரிசோதனையில் இருப்பதாக டியுக்-என்யுஎஸ் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் வீ எங் இயோங் தெரிவித்தார்.
டெங்கிக் கிருமிப் பரவலைத் தடுப்பதில் நோய்த் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தலாம் என்று சிங்கப்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற 5வது ஆசியா டெங்கி உச்சநிலை மாநாட்டில் ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர்.
மருந்து எவ்வளவு விரைவில் தயாரிக்கப்படுகிறது என்பது, இந்தப் பரிசோதனைகள் எவ்வளவு சிறப்பாக நடந்தேறுகின்றன என்பதைப் பொறுத்தே உள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தில் ஆய்வுக் கொள்கை, ஒத்துழைப்புத் துறையின் முன்னாள் இயக்குநரான பேராசிரியர் டிக்கி பாங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு கடந்த மாதம் எழுதிய வாசகர் கடிதம் ஒன்றில், மூத்தோரிடையே 'டெங்வேசியா' தடுப்பூசியைப் பரவலாக பயன்படுத்த அழைப்பு விடுத்தார்.

