பெருந்தொற்று தயார்நிலை, தடுப்புக்காக நடுவர் நிதியம்
பெருந்தொற்று தடுப்பு, தயார்நிலை, பதில் நடவடிக்கைக்காக உலக வங்கியின் ஆதரவுடன் நிறுவப்பட்டு உள்ள நடுவர் நிதியம் ஒன்றுக்கு சிங்கப்பூர் US$10 மில்லியன் (S$13.9 மி.) பங்களிக்கும். நிதி அமைச்சும் சுகாதார அமைச்சும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இதைத் தெரிவித்தன.
ஜி20 நிதி, சுகாதார அமைச்சர்களின் கூட்டுச் சந்திப்பு, இந்த நிதியத்தை அமைப்பதற்கான முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்தது. ஜி20 உயர்மட்ட சுயேச்சைக் குழுவின் பரிந்துரைகளுக்கும் இந்த முன்மொழிவு ஒத்து இருக்கிறது.
பெருந்தொற்று தயார்நிலை, பதில் நடவடிக்கைகாக நிதி அளிக்கும் இந்தக் குழு, கடந்த ஆண்டு இத்தாலிய ஜி20 தலைமைத்துவத்தால் அமைக்கப்பட்டது.
பெருந்தொற்று தடுப்பு, தயார்நிலை, பதில் நடவடிக்கைக்கு நிதி அளிப்பதில் நிலவும் குறைபாட்டைப் போக்கவும் அவை தொடர்பான முதலீடுகளுக்குக் கூடுதலான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஊக்குவிக்கவும் இந்த நடுவர் நிதியம் நோக்கம் கொண்டுள்ளது.
குறைந்த, நடுத்தர வருவாய் கொண்டிருக்கும் நாடுகளில் உள்நாட்டு முதலீடுகளைத் துரிதப்படுத்த ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு இந்த நிதியம் துணைநிற்கும். மேலும், வட்டார அளவிலும் உலகளவிலும் பெருந்தொற்று தடுப்பு, தயார்நிலை, பதில் நடவடிக்கையின் ஆற்றலை மேம்படுத்தவும் இது உதவும்.
இந்த நிதியத்தை நிர்வகிக்க செயல்பாட்டு, சட்டபூர்வ, நிதிச் சேவைகளை உலக வங்கி வழங்குகிறது.
ஐரோப்பிய ஆணையம், ஜெர்மனி, இந்தோனீசியா, அமெரிக்கா ஆகியவை இந்த நிதியத்துக்குப் பங்களிக்க உறுதிபூண்டு உள்ளன.
"இந்தோனீசியாவின் ஜி20 தலைமைத்துவத்துடனும் எங்கள் அனைத்துலக பங்காளிகளுடனும் சிங்கப்பூர் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றும்," என்று நிதி, சுகாதார அமைச்சுகள் கூறின.
ஜி20 கூட்டமைப்பில் ஐரோப்பிய ஒன்றியமும் 19 நாடுகளும் இடம்பெற்றுள்ளன. இவ்வாண்டு நவம்பரில் இந்தோனீசியாவின் பாலித் தீவில் அந்தக் கூட்டமைப்பு அதன் உச்சநிலை மாநாட்டை நடத்தும்.

