அங் மோ கியோவில் கடந்த திங்கட்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த மாதை பல வாகனங்கள் மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவற்றில் டவர் டிரான்சிட் பேருந்தும் டிரான்ஸ்-கேப் டாக்சியும் அடங்கும்.
கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணம் விளைவித்ததற்காக 53 வயது ஆண் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை நேற்று தெரிவித்தது.
பாதசாரி ஒருவரை டாக்சி ஒன்று மோதியதாக காவல்துறை முன்னதாக கூறியிருந்தது. ஆனால், இந்த விபத்தில் பல வாகனங்கள் சம்பந்தப்பட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அங் மோ கியோ ஸ்திரீட் 21ல் திங்கட்கிழமை இரவு 10.25 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
அந்த 61 வயது மாது சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர் அறிவித்தார்.
இந்த விபத்தில் பல்வேறு வாகனங்கள் சம்பந்தப்பட்டு இருந்தது தெரிய வந்தாலும், டிரான்ஸ்-கேப் ஓட்டுநர் மட்டுமே விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்தார்.
அந்த 67 வயது ஆண் டாக்சி ஓட்டுநரும் தனியார் காரை ஓட்டிய 58 வயது ஆடவர் ஒருவரும் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகின்றனர்.
அந்த மாதை எந்த வாகனம் முதலில் மோதியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறை கூறியது.

