செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c2b4657e-a09b-4b16-aca2-399941ccf917
-

வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவருக்கு குரங்கம்மை தொற்று

வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்த ஒருவருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தி உள்ளது. விமானப் பணியாளராகப் பணியாற்றும் அந்த 42 வயது பிரிட்டிஷ் நாட்டவர், கடந்த வாரம் புதன்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் இடையிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சிங்கப்பூரில் இருந்ததாக அமைச்சு நேற்று முன்தினம் இரவு தெரிவித்தது.

கடந்த திங்கட்கிழமை அவருக்குக் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறிய அமைச்சு, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி தொடர்வதாகக் கூறியது.

நேற்று முன்தின நிலவரப்படி, அந்த ஆடவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 13 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் 21 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.

வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்த ஒருவருக்கு குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டிருப்பது, 2019க்குப் பிறகு இதுவே முதன்முறை. அப்போது நைஜீரிய ஆடவர் ஒருவரிடம் தொற்று கண்டறியப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஜூன் 6ஆம் தேதி சுகாதார அமைச்சு கூறியிருந்தது.

தேசிய தின அணிவகுப்பு ஒத்திகை: ஜூன் 25ல் சில சாலைகள் மூடல்

தேசிய தின அணிவகுப்பை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகைக்காக நாளை மறுதினம் (ஜூன் 25) சில சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மரினா பே மிதக்கும் மேடையில் ஒத்திகை நடைபெறும். அதிகாரம் பெற்ற வாகனங்கள், காவல்துறை மற்றும் அவசரகால வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

துணை காவல்துறை அதிகாரிகளும் சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட சாலைகளில் பணியமர்த்தப்பட்டு வாகனமோட்டிகளுக்கு வழிகாட்டுவர். மரினா பே பகுதியில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாம் என்பதால் வாகனமோட்டிகள் தங்கள் பயணங்களுக்கு முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அந்தப் பகுதிக்குப் பயணம் செய்வோர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.