வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்களுக்கான நேற்றைய ஏலத்தில் எல்லா வகையான வாகனங்களிலும் ஏற்றம் பதிவானது. ஜூன் 8ஆம் தேதி இரு வகையான வாகனங்களுக்கான கட்டணம் $100,000ஐத் தாண்டிய பின்னர் நடந்திருக்கும் முதல் ஏலம் இது.
1,600சிசிக்கு மேற்பட்ட கார்கள் அல்லது 110 கிலோவாட்டிற்கு மேற்பட்ட முழுமையான மின்சார வாகனங்களுக்கான சிஓஇ 5.3 விழுக்காடு உயர்ந்து $106,001 ஆனது. முந்திய ஏலத்தில் இதன் கட்டணம் $100,684 ஆக இருந்தது.
பெரிய கார்களை உள்ளடக்கிய பொது வாகனப் பிரிவிற்கான கட்டணம் 3.7 விழுக்காடு அதிகரித்து $104,400 ஆனது. இதற்கு முன்னர் இந்தக் கட்டணம் $100,697 ஆகப் பதிவாகி இருந்தது.
அதேபோல சிறிய கார்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட மின்சார வாகனங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் $73,801லிருந்து 1.6 விழுக்காடு ஏற்றம் கண்டு $74,989 ஆனது.
சரக்கு வாகனங்கள், பேருந்து ஆகியவற்றை உள்ளடக்கிய வர்த்தக வாகனப் பிரிவுக்கான கட்டணம் $9 மட்டும் உயர்ந்து $53,011 என்று முடிந்தது.
மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ 3 விழுக்காடு அதிகரித்து $10,302 என பதிவானது. முந்திய ஏலத்தில் இதன் கட்டணம் $10,000ஆக இருந்தது.

