தொடர்புச் செயற்கைகோளின் உதவியுடன் விமானிகள் விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொள்வதன் சாத்தியம் குறித்து சிங்கப்பூர் ஆய்வு செய்யவிருக்கிறது.
இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை.
இது வெற்றிபெற்றால் விமானப் போக்குவரத்து தொடர்பான அனைத்துலகச் சட்டங்களைச் சீர்படுத்தவும் விமானப் பயணங்களைப் பாதுகாப்பானவையாக வைத்திருக்கவும் இயலும் என்று கருதப்படுகிறது.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் விண்வெளித் தொழில்நுட்பத்துறை அலுவலகமும் மேலும் இரு நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது.
'சிடா' விமானப் போக்குவரத்து நிறுவனம், செயற்கைகோள் நிறுவனமான 'ஸ்டார்டிகல்' ஆகிய நிறுவனங்கள் இந்த ஆய்வில் பங்கேற்கவுள்ளன.
ஓராண்டுக்குத் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆய்விற்காக தொடர்புச் சாதனங்களை ஏந்திய செயற்கைகோள் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும்.
இதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு நேற்று கையெழுத்தானது.
தற்போதைய 'விஎச்எஃப்' எனும் மிக அதிக அலைவரிசை கொண்ட தொடர்பு நிலையங்கள் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருப்பதையும் பெருங்கடல்கள், மலைகள், உள்ளடங்கிய பகுதிகள் ஆகியவற்றில் கிட்டத்தட்ட இத்தகைய தொடர்பு நிலையங்கள் இல்லை என்பதையும் நிறுவனங்கள் சுட்டின.
விமானங்கள் தரையிறங்கும்போதும் விமானப் பாதையில் மாற்றம் தேவை எனும்போதும் விமானிகள் 'விஎச்எஃப்' அலைவரிசைத் தொடர்புமுறையில் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் தொடர்புகொள்வர். செயற்கைகோள் உதவியுடன் செயல்படும் கட்டமைப்பு மேம்பட்ட, விரிவான தொடர்புக்கு வகைசெய்யும் என்று நம்பப்படுகிறது.

