சிங்கப்பூர் நாணய ஆணையம் மூன்று மின்னிலக்க நாணய நிறுவனங்களுக்குக் கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளது.
'கிரிப்டோ.காம்', 'ஜெனிசிஸ்', 'ஸ்பேரோ' ஆகியவை அவை.
இந்த மூன்று நிறுவனங்களையும் சேர்த்து கடந்த ஈராண்டுகளில் இதுவரை மொத்தம் 14 நிறுவனங்களுக்கு மின்னிலக்கக் கட்டணச் சேவை வழங்க ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிறுவனங்களில் சில உரிமம் பெற்றுள்ளன; மற்றவற்றுக்குக் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
நிலையான மின்னிலக்க நாணயங்களை விற்கும் நிறுவனங்கள், இணையத்தில் இவற்றை வாங்கவோ விற்கவோ உதவும் தளங்கள் ஆகியவற்றுடன் பாரம்பரிய நிதி நிறுவனங்களும் இவ்வாறு ஒப்புதல் பெற்ற நிறுவனங்களில் அடங்கும்.
புதிதாகக் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்ட நிறுவனங்கள் குறித்து துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று அறிவித்தார்.
'ஸூரிக்' நகரில் நடைபெற்ற 'பாயிண்ட் ஸீரோ' கருத்தரங்கில் அவர் காணொளி மூலம் கலந்துகொண்டார்.
"சிங்கப்பூர் மின்னிலக்க நாணய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறது," என்று துணைப் பிரதமர் ஹெங் தமது உரையில் குறிப்பிட்டார். 'வெப் 3.0' கட்டமைப்பின் வளர்ச்சிக்குப் பங்காற்றுவதில் புத்தாக்கமும் பொறுப்பும் மிக்க நிறுவனங்களுடன் கைகோப்பதில் சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இதன் தொடர்பில் மேற்கொள்ளப்படும் சோதனை முயற்சிகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் வேண்டிய உதவிகளைச் செய்துதரும் என்று திரு ஹெங் சொன்னார்.
சென்ற மாத இறுதி நிலவரப்படி, சிங்கப்பூரில் மின்னிலக்க நாணயச் சேவை வழங்குவதற்காக 196 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது.
இவற்றில் 14 விண்ணப்பங்களுக்கு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், 74 விண்ணப்பங்கள் மீட்டுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 108 விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளன; மூன்று நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்று வாரியம் கூறியது.

