சிங்கப்பூரின் வெவ்வேறு இடங்களில் பெண்களை ஆபாசமாகப் படமெடுத்த ஆடவருக்கு நேற்று ஓராண்டுச் சிறைத்தண்டனையுடன் 2,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரரான அவர், குற்றச்செயலில் ஈடுபட்டபோது பிரிட்டனைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தில் பயின்றதாகக் கூறப்பட்டது.
கோலின் சுவா யி ஜின், 12 பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்ததாகக் கூறப்பட்டது. இதன் தொடர்பில் சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளை சென்ற ஆண்டு ஜுலை 29ஆம் தேதி அவர் ஒப்புக்கொண்டார்.
ஹோட்டல் கழிப்பறை, தனது வீட்டுக் கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் அவர் படமெடுக்கும் கருவியை ரகசியமாகப் பொருத்தி காணொளிகளைப் பதிவுசெய்தார். மின்படிகளில் பெண்களை அவர் ஆபாசமாகப் படமெடுத்ததாகவும் கூறப்பட்டது.
முன்னதாக 2016ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையே அளிக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சுவாவை அடையாளம் கண்டனர்.
2019ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி சுவாவின் வீட்டில் நடத்திய சோதனையில் ஏழு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் 16 ஆபாசக் காணொளிகளும் 124 படங்களும் இருந்ததாகக் கூறப்பட்டது. காணொளிகளில் பெரும்பாலானவை சுவாவின் வீட்டில் எடுக்கப்பட்டவை.
ஆபாசப் படங்களைப் பார்க்கத் தூண்டும் மனநலக் கோளாற்றுக்காக சுவா சிகிச்சை பெறுவதாகக் கூறப்பட்டது.