செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d5aae641-9cbf-4727-b223-8f45988a7a12
-

'மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கும் சாத்தியம் குறைவு'

அண்மையில் கொவிட்-19 பிஏ.4, பிஏ.5 கிருமிவகை பரவலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதிலும் சிங்கப்பூரில் கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்தும் சாத்தியம் மிகவும் குறைவு என்று பொதுச் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த கொவிட்-19 அலை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள சிங்கப்பூர் தயாராக இருப்பதாக அவர்கள் கூறினர்.

இந்நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்தால் நாட்டின் பொருளியல் பாதிப்படையும் என்று அவர்கள் தெரிவித்தனர். கொவிட்-19 பிஏ.4, பிஏ.5 கிருமிவகை விரைவாகப் பரவக்கூடியவை என்றபோதிலும் அவை அதிக பாதிப்பை ஏற்படுத்தாததை நிபுணர்கள் சுட்டினர்.

கொவிட்-19 அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை

அடுத்த கொவிட்-19 அலைக்குத் தயாராகும் வகையில் தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று சிலர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி நிலையங்களில் நேற்று மக்கள் கூட்டம் அதிகம் இல்லாதபோதிலும் முன்னெச்சரிக்கையாக சிலர் அங்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள 20க்கும் அதிகமானோர் காத்துக்கொண்டிருந்ததாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

குறைந்தது ஒரு கூடுதல் தடுப்பூசியை (பூஸ்டர்) மக்கள்தொகையில் 77 விழுக்காட்டினர் போட்டுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஆனால் 60 வயதும் அதற்கும் அதிகமான கிட்டத்தட்ட 80,000 மூத்தோர் இன்னும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று அமைச்சு கவலை தெரிவித்தது.

$50,000 நிதியுதவி வழங்கும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $50,000 நிதியுதவி வழங்குகிறது. ரிக்டர் அளவில் 6.1 நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் பலர் மாண்டுவிட்டனர்.

பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்போருக்கு தேவையான தண்ணீர், உணவு, அவசரகாலத் தங்குமிடம், மருத்துவப் பராமரிப்பு, இதர அத்தியாவசியப் பொருள்களை கொண்டுபோய்ச் சேர்க்க இந்த நிதி வழங்கப்படுவதாக சங்கம் நேற்று கூறியது.

புதிய அனுமதி அட்டைக்கான ஒப்புதல் விரைவாக வழங்கப்படும்

இன்று முதல் லிட்டில் இந்தியா, சைனாடவுன், கேலாங் செராய், ஜூரோங் ஈஸ்ட் ஆகிய இடங்களுக்குச் செல்ல வெளிநாட்டு ஊழியர்கள் புதிய அனுமதி அட்டை கோரி விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பம் செய்யும்போது அவர்களுக்கு மிகவும் விரைவாக ஒப்புதல் வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது. வழங்கப்படும் அனுமதி அட்டை ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அனுமதி அட்டை கோரி எஸ்ஜிவொர்க்பாஸ் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.